ADDED : ஜன 16, 2025 04:31 AM

சென்னை : தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக, மதுபானங்களை விற்கிறது. அவற்றில் தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கு விற்பனை நடக்கிறது. விடுமுறை நாட்களில் அதிகரிக்கிறது.
பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதை உறவினர்கள், நண்பர்களுடன் கொண்டாட, பலரும் முன்கூட்டியே சொந்த ஊர்களுக்கு சென்றனர். பலர் நண்பர்களுடன் மது விருந்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, நேற்று மதுக்கடைகளுக்கு விடுமுறை. அதனால், முந்தைய நாட்களில், 'குடி'மகன்கள் அதிக மது வகைகள் வாங்கினர். இதனால், 13ம் தேதி, 185 கோடி ரூபாய்; 14ம் தேதி, 268 கோடி ரூபாய் என, இரு நாட்களில், 453 கோடி ரூபாய்க்கு மது வகைகள் விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பொங்கல் பண்டிகையை ஒட்டிய தொடர் அரசு விடுமுறையால், மதுக்கடைகளில் பொங்கலுக்கு எவ்வளவு மது வகைகள் விற்பனையாகின என்ற விபரம் துல்லியமாக கிடைக்கவில்லை' என்றார்.

