'டாஸ்மாக்' கடைகளில் 'சர்வர்' பாதிப்பால் மது பாட்டிலை 'ஸ்கேன்' செய்வதில் சிக்கல்
'டாஸ்மாக்' கடைகளில் 'சர்வர்' பாதிப்பால் மது பாட்டிலை 'ஸ்கேன்' செய்வதில் சிக்கல்
ADDED : மே 21, 2025 12:34 AM
சென்னை:மதுக்கடைகளில், 'சர்வர்' பாதிப்பு காரணமாக, 'ஸ்கேனர்' கருவிகள் அடிக்கடி முடங்குவதால், மது பாட்டிலை, 'ஸ்கேன்' செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது.
தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனம், 4,787 மதுக்கடைகள் வாயிலாக மதுபானங்களை விற்கிறது. இவற்றில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க, மாநிலத்தில் மொத்தமுள்ள, 38 மாவட்டங்களில், 30ல் உள்ள கடைகளில், முழு கணினிமயமாக்கும் திட்டத்தையும் செயல்படுத்தி உள்ளது.
மற்ற மாவட்டங்களில் இந்த பணி நடக்கிறது. கணினி மயமாக்கும் திட்டத்தின் கீழ், தலா ஒரு கடைக்கு, சராசரியாக மூன்று - நான்கு, 'ஸ்கேனர்' கருவிகள் மற்றும் ஒரு பிரிண்டர் வழங்கப்பட்டுள்ளன.
மொபைல்போன் போன்று காணப்படும் ஸ்கேனர் கருவியில், மது பாட்டில்கள் ஸ்கேன் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன.
இதனால், எந்த நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட மது, எந்த கிடங்கில் இருந்து அனுப்பப்பட்டது, எப்போது அனுப்பப்பட்டது, எத்தனை நாட்களாக கடையில் இருக்கிறது என்ற விபரங்களை, அதிகாரிகள் இணையதளத்தில் துல்லியமாக அறிய முடியும்.
இந்நிலையில், சர்வர் பிரச்னையால், ஸ்கேனர் கருவிகளின் இயக்கம் அடிக்கடி முடங்குவதால், மது பாட்டில்களை ஸ்கேன் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், மது வாங்க வருவோர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்ற புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, மதுக்கடை ஊழியர்கள் கூறியதாவது:
மது பாட்டிலை ஸ்கேன் செய்துதான் விற்க வேண்டும் என, அதிகாரிகள் கூறுகின்றனர். சர்வர் பாதிப்பால், ஸ்கேனர் கருவிகளின் செயல்பாடு முடங்குகிறது. இதனால், மதுபாட்டிலை ஸ்கேன் செய்வது சிரமமாகிறது. அத்துடன், இரவில் விற்பனை விபரங்களை சரிபார்க்கும் பணியிலும் பாதிப்பு ஏற்படுகிறது.
இதுதொடர்பாக, மாவட்ட மேலாளர்களிடம் புகார் அளித்தாலும் கண்டுகொள்வதில்லை. இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.