'டாஸ்மாக்' விசாகன் வீட்டில் இரண்டாவது நாளாக சோதனை; தி.மு.க., முக்கிய புள்ளி வீட்டுக்கு 'சீல்'
'டாஸ்மாக்' விசாகன் வீட்டில் இரண்டாவது நாளாக சோதனை; தி.மு.க., முக்கிய புள்ளி வீட்டுக்கு 'சீல்'
ADDED : மே 18, 2025 02:40 AM
சென்னை : மதுபானங்கள் விற்பனை மற்றும் கொள்முதலில் நடந்த, 1,000 கோடி ரூபாய் ஊழல் விவகாரத்தில், 2வது நாளாக நேற்றும், 'டாஸ்மாக்' நிர்வாக இயக்குநர் வீட்டில், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்ததுடன், தி.மு.க., மேலிடத்திற்கு நெருக்கமான தொழிலதிபர் ரத்தீஷ் வீட்டிற்கும், 'சீல்' வைத்தனர்.
டாஸ்மாக் நிறுவனத்தில், 1,000 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக கூறப்பட்டது.
இதை தொடர்ந்து, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீடு உட்பட, 12 இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
ஒப்பந்ததாரர் வீடு
சென்னை, மணப்பாக்கம், சி.ஆர்.புரத்தில் உள்ள விசாகன் வீடு, ஆழ்வார்பேட்டை கே.பி.தாசன் சாலையில் உள்ள சினிமா தயாரிப்பாளரும், முதல்வரின் நெருங்கிய உறவினருமான ஆகாஷ் பாஸ்கரன் வீடு, சூளைமேடு ராஜகீழ் வீதியில் உள்ள தனியார் மதுபான நிறுவன மக்கள் தொடர்பு அதிகாரி மேகநாதன் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்தது.
மேலும், திருவல்லிக்கேணியில் உள்ள தொழிலதிபர் தேவக்குமார் வீடு, சாஸ்திரி நகர் 2வது குறுக்கு தெருவில் உள்ள மின்வாரிய ஒப்பந்ததாரர் ராஜேஷ்குமார் வீடு, சேத்துப்பட்டு, ஜெகநாதபுரம் முதல் தெருவில் உள்ள பாபு வீடு, தி.நகர் ஆற்காடு சாலையில் உள்ள கேசவன் வீடு, எம்.ஆர்.சி., நகரில் உள்ள தி.மு.க., மேலிடத்திற்கு நெருக்கமான ரத்தீஷ் வீடு ஆகியவற்றிலும் சோதனை நடந்தது.
விசாகன் வீட்டில் நடந்த சோதனையின் போது, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றிய அமலாக்கத்துறை அதிகாரிகள், அது தொடர்பாக, அவரது மனைவி, மகனிடமும் விசாரித்தனர். விடிய விடிய நடந்த சோதனை, 2வது நாளாக நேற்றும் நீடித்தது.
நேற்று காலை, 10:45 மணியளவில், விசாகன், தேவக்குமார், ராஜேஷ்குமார் ஆகியோரை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று, தனியாக விசாரணை நடத்தினர்.
அவர்கள் பயன்படுத்திய மொபைல் போன், லேப்டாப் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடந்தது. மேலும், விசாகனுடன் தொடர்பில் இருந்தவரும், தி.மு.க., மேலிடத்திற்கு நெருக்கமானவருமான ரத்தீஷ் வீட்டிலும், நேற்று சோதனை தொடர்ந்தது.
தலைமறைவு
இரண்டாவது நாள் சோதனையின் போதும், அவர் வீட்டில் இல்லாமல் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது.
அவரது வீட்டில், பல்வேறு ஆவணங்களை கைப்பற்றிய அமலாக்கத்துறை அதிகாரிகள், ரத்தீஷ் வீட்டை பூட்டி, 'சீல்' வைத்தனர்.
இந்த வழக்கில் முக்கிய பங்கு ரத்தீஷிற்கு இருப்பதால், வெளிநாடு தப்பி செல்லாமல் தடுக்க, அவரை தேடும் பணியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர்.
சொத்து பத்திரங்கள், 'பார் டெண்டர்' தொடர்பான ஆவணங்கள், 'வாட்ஸாப்' உரையாடல்கள் அடிப்படையில், மேலும் சிலரிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
ஒருவேளை, ரத்தீஷ் வெளிநாடு தப்பிச் சென்றால், அவருடைய பாஸ்போர்ட்டை முடக்கி, வெ ளிநாட்டில் இருந்து அவரை இந்தியா வரவழைக்கும் தீவிரத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் உள்ளனர்.