UPDATED : ஜன 19, 2024 11:36 PM
ADDED : ஜன 19, 2024 11:18 PM

சென்னை:''துார்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சி, 39.71 கோடி ரூபாயில், டி.டி., தமிழ் சேனலாக புதுப்பொலிவு பெற்றுள்ளது,'' என, மத்திய தகவல், ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
'பொதிகை' என்ற பெயரில், இதுவரை தமிழ் ஒளிபரப்பு சேவையை வழங்கி வந்த துார்தர்ஷன் தொலைக்காட்சி, 39.71 கோடி ரூபாயில், 'டி.டி., தமிழ்' என்ற பெயரில், புதுப்பொலிவுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதில், துார்தர்ஷனின் பாரம்பரியம் குறையாமல்,புதிய எண்ணங்கள், புதிய வண்ணங்கள் என்ற லட்சியத்துடன், புதுமையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன.
நெடுந்தொடர்கள், சினிமா படங்கள், சினிமா பாடல்கள் அடங்கிய ஒலியும், ஒளியும் என்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகள், தனியார் சேனல்களுக்கு இணையாக ஒளிபரப்பாக உள்ளனன.
ஐந்து நிமிட விரைவு செய்திகள், தினமும் மூன்று முறை, 30 நிமிட செய்தி அறிக்கைகள் இடம் பெறும். தினமும் மாலை, 6:00 முதல் 7:00 மணி வரை, எதிரும் புதிரும் என்ற தலைப்பில், விவாத நிகழ்ச்சியும் நடக்கும்.
தனியார் சேனல்களில், நெடுந்தொடர்களை தயாரிக்கும் பிரபல நிறுவனங்களின் மூன்று நெடுந்தொடர்கள், தினமும் இரவில் ஒளிபரப்பாக உள்ளன. வார நாட்களில் மகாகவி பாரதி தொடரும் ஒளிபரப்பாகும்.
இதுதவிர சமையல், சுற்றுலா, ஆயுர்வேதம்,வீட்டு மருத்துவம், திருமந்திரம் என பல்வேறு நிகழ்ச்சிகளும், இனி தொடர்ந்து இடம் பெறும்.
உலகெங்கும் வாழும் தமிழர்கள், தங்கள் பகுதிகளில் தமிழ் கலாசாரத்தை எப்படி பாதுகாக்கின்றனர் என்பதை சித்தரிக்கும் தமிழ் பாலம் நிகழ்ச்சியை, டி.டி., தமிழ் தயாரித்து வழங்கவுள்ளது.
கனரா வங்கி உதவியுடன், ஸ்டார்ட் அப் ஹேண்ட்ஷேக் என்ற நிகழ்ச்சியும் புதிதாக இடம்பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, பிரசார் பாரதியின் தலைமை செயல் அதிகாரி கவுரவ் திவேதி உடனிருந்தார்.