sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எஸ்.எஸ்.ஏ., நிதியை மத்திய அரசு தராததால் ஆசிரியர், மாணவர் எதிர்காலம் முடங்கும் அபாயம்

/

எஸ்.எஸ்.ஏ., நிதியை மத்திய அரசு தராததால் ஆசிரியர், மாணவர் எதிர்காலம் முடங்கும் அபாயம்

எஸ்.எஸ்.ஏ., நிதியை மத்திய அரசு தராததால் ஆசிரியர், மாணவர் எதிர்காலம் முடங்கும் அபாயம்

எஸ்.எஸ்.ஏ., நிதியை மத்திய அரசு தராததால் ஆசிரியர், மாணவர் எதிர்காலம் முடங்கும் அபாயம்


ADDED : பிப் 19, 2025 12:18 AM

Google News

ADDED : பிப் 19, 2025 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த கல்வி திட்டப்பணிகளுக்கான மத்திய அரசின் நிதி வழங்கப்படாததால், ஆசிரியர்கள், மாணவர்களின் எதிர்காலம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசு, 6 -- 14 வயதுடைய குழந்தைகளின் படிப்பை உறுதி செய்யும் வகையில், சர்வ சிக் ஷா அபியான் திட்டத்தை அறிமுகம் செய்தார். அதைத் தொடர்ந்து, 2009ம் ஆண்டு, ஆர்.எம்.எஸ்.ஏ., எனும் இடைநிலை கல்வி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

இலவச கல்வி


மேல்நிலை வகுப்புகள் வரை படிக்கும் மாணவர்களுக்கான இலவச கல்வியை உறுதி செய்யும் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

கடந்த 2018ல், இவை இரண்டும் இணைக்கப்பட்டு, எஸ்.எஸ்.ஏ., எனும் ஒருங்கிணைந்த கல்வி திட்டம் சமக்ர சிக் ஷா அபியான் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு முதலில், 50:50 என்ற வகையில் மத்திய, மாநில அரசுகள் நிதி வழங்கின. பின், 55:45 என்ற விகித்திலும், தற்போது, 60:40 என்ற விகிதத்திலும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், 2020ல், மத்திய அரசு புதிய தேசிய கல்வி கொள்கையை அறிமுகம் செய்தது. இதை, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் ஏற்கவில்லை. ஆனாலும், அவற்றில் உள்ள பல கருத்துகளை ஏற்று, செயல்படுத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பி.எம்.ஸ்ரீ எனும் திட்டமும் அதன் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது.

அதாவது, நாட்டில் உள்ள சில பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, புதிய கல்விக் கொள்கையின் செயல் திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த பள்ளிகளின் முடிவுகளின் அடிப்படையில், அது விரிவுபடுத்தப்படுகிறது.

அந்த வகையில், 'தமிழக அரசும் பி.எம்.ஸ்ரீ திட்டம் உள்ளிட்ட தேசிய புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான், சமக்ர சிக் ஷா அபியான் திட்ட ஒதுக்கீட்டை வழங்க முடியும்' என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின், கனிமொழி தலைமையில் தமிழக எம்.பி.,க்கள் மற்றும் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷ் உள்ளிட்டோர் வலியுறுத்தியும், மத்திய அரசு தன் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. இதை சரி செய்ய, தமிழக அரசு தன் பங்களிப்பை முன்கூட்டியே வழங்கி, நிலைமையை சமாளித்து வருகிறது.

இதனால், தமிழக கல்வித் துறையில் அதிகளவில் பாதிப்புகள் ஏற்படும் என, கல்வியாளர்கள் கவலைப்படுகின்றனர்.

ரூ.2,152 கோடி


இதுகுறித்து, தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலர் செல்லய்யா கூறியதாவது:

தமிழகத்துக்கு ஒருங்கிணைந்த கல்விக்காக மத்திய அரசு, 2,152 கோடி ரூபாயும், கடந்தாண்டு நிதியாக 249 கோடி ரூபாயும் தர வேண்டும். இதுவரை தராததால், 12,000 பகுதிநேர சிறப்பாசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், மாற்றுத் திறனாளிகளின் பராமரிப்பு ஆசிரியர்கள் என, 15,000 ஆசிரியர்களின் ஊதியம், வகுப்பறை கட்டடங்கள், கற்றல் உபகரணங்கள், பயிற்சிகள் தடைபட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, ஆசிரியர் பயிற்றுனர் சங்க தலைவர் முருகன் கூறியதாவது:

கடந்த 2018ல், மாநில கல்வி திட்டங்களுக்காக ஒப்பந்தம் செய்த மத்திய அரசு, 2020ல் உருவான தேசிய கல்விக் கொள்கையுடன் இணைத்து, எஸ்.எஸ்.ஏ., நிதியை மறுப்பது முறையல்ல.

இதனால், 1.50 லட்சம் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ உதவி, சக்கர நாற்காலி, காதுகேட்கும் கருவி உள்ளிட்டவற்றை வாங்க முடியவில்லை.

அவர்களுக்கான, 'பிசியோதெரபிஸ்ட்' உள்ளிட்டோரையும் நியமிக்க முடியவில்லை. மேலும், அவர்களுக்கு மாத உதவித்தொகையாக, 1,000 ரூபாய் வழங்கப்படுவதும் நிறுத்தப்படும். ஆதரவற்ற மாணவியருக்கான விடுதி, உணவு, படிப்பு உள்ளிட்டவையும் நிறுத்தப்படும்.

கைத்தொழில்


மாணவியரின் தற்காப்புக் கலைகளை பயிற்றுவிக்கும் பயிற்சியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாததால், கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகளும், கலை வகுப்புகளான ஓவியம், இசை, கைத்தொழில் உள்ளிட்டவையும் தடைபட்டுள்ளன. பள்ளிகளுக்கான ஆய்வக கருவிகள், கம்ப்யூட்டர், கழிப்பறை உள்ளிட்ட அத்தியாவசிய கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதைச் சார்ந்து, பத்தாண்டுகளுக்கும் மேல் பணியாற்றும், 12,000 பகுதிநேர ஆசிரியர்கள், 3,000 பயிற்றுனர்கள், 1,800 பிசியோதெரப்பிஸ்ட், 436 வட்டார வள மையத்தினர், 15,000 நிரந்தர ஆசிரியர்கள் உள்ளிட்ட, 32,000 ஊழியர்களின் பணிப் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால், தமிழகத்தின் கல்வி கட்டமைப்பே கலகலக்கும் நிலை உருவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us