தலைமை ஆசிரியர்களுக்கு தர ஊதியம் ரூ.5400 நிர்ணயம் செய்ய வேண்டும் ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
தலைமை ஆசிரியர்களுக்கு தர ஊதியம் ரூ.5400 நிர்ணயம் செய்ய வேண்டும் ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
ADDED : ஆக 15, 2025 12:30 AM
சிவகங்கை:'அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தர ஊதியம் ரூ.5400 நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்,' என, தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சிவகங்கையில் கூட்டணி நிர்வாகி பாண்டியராஜன் கூறியதாவது: தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு விரைவாக களையப்படும் என குறிப்பிட்டார். தி.மு.க., ஆட்சிப்பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு இன்று வரை களையப்படவில்லை.
அரசு அலுவலர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. முதல்வர் அளித்த தேர்தல் அறிக்கையில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டமே நடைமுறைப்படுத்தப்படும் என்றார். ஆனால் இன்று வரை நடைமுறை படுத்தவில்லை. இந்த இரண்டு அறிவிப்புகளையும் விரைந்து தமிழக அரசு நடைமுறை படுத்த வேண்டும்.
பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கும் அரசாணை 243 ஐ ரத்து செய்ய வேண்டும். அரசாணை எண் 23ன் படி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வுநிலைக்கு தர ஊதியம் ரூ.5400 பெற்றவர்களுக்கு தேர்நிலை பெற்ற பின்பு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு அளிக்கப்பட்ட தணிக்கை தடைகளை நீக்கி தொடர்ந்து தர ஊதியம் ரூ.5400 பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிராமப்புறங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சமூக விரோதிகளாலும், ஒழுங்கீன நடத்தை உள்ளவர்களாலும் தற்போது பள்ளியில் படிக்கும் மாணவர்களாலும் பல்வேறு தொல்லைகளுக்கு ஆட்படுகின்றனர். மற்றத்துறைகளில் உள்ளதுபோல் ஆசிரியர்களுக்கும் பணிப்பாதுகாப்பு சட்டம் கொண்டுவரவேண்டும். உயர்கல்வி பயின்றவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் என்றார்.