மாணவர்களுடன் மதிய உணவு சாப்பிட ஆசிரியர்களுக்கு உத்தரவு
மாணவர்களுடன் மதிய உணவு சாப்பிட ஆசிரியர்களுக்கு உத்தரவு
ADDED : செப் 21, 2024 02:41 AM
சென்னை:அரசு பள்ளி, உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட வேண்டும் என, பள்ளிக்கல்வி துறைஉத்தரவிட்டுள்ளது.
வேலுார் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், பிளஸ் 2 மாணவிக்கு வளைகாப்பு நடத்துவது போல, வீடியோ ரீல்ஸ் பதிவு செய்து, சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். இது,சர்ச்சையானது.
இதுகுறித்து விசாரித்த முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர் சாமுண்டீஸ்வரியை, 'சஸ்பெண்ட்' செய்துள்ளார். பள்ளியின் தலைமை ஆசிரியை அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அந்த மாவட்டபள்ளிகளுக்கு சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளார்.
அதில், மாணவ, மாணவியர் மொபைல் போன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை பள்ளிக்கு எடுத்து வருகின்றனரா என்பதை ஆசிரியர்கள் சோதனை செய்து அறிய வேண்டும்.
மதிய உணவு இடைவேளையில், ஆசிரியர்கள் தங்கள் அறையில் அமர்ந்தோ; வெளியில் சென்றோ சாப்பிடாமல், மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட வேண்டும்.
ஒவ்வொரு பாட வேளையிலும், மாணவர்களின் வருகையை ஆசிரியர்கள் கண்காணித்து, தலைமை ஆசிரியருக்கும், பெற்றோருக்கும் தகவல் அளிக்க வேண்டும். பள்ளியில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தால், அந்த வகுப்பின் ஆசிரியரும், தலைமை ஆசிரியரும் பொறுப்பேற்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளார்.
புதிய வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்து, அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பும் வரை, இந்தகட்டுப்பாடுகளை கடைபிடிக்கும்படி, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் வாய்மொழி உத்தரவுபிறப்பித்துள்ளனர்.