ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு போடுவதில் சிக்கல்
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு போடுவதில் சிக்கல்
ADDED : ஏப் 14, 2026 04:34 AM
சென்னை: தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தபால் ஓட்டு போடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபடுவதற்காக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மூன்று கட்ட பயிற்சியை, தேர்தல் கமிஷன் வழங்குகிறது. இதுவரை, இரண்டு கட்ட பயிற்சி நிறை வடைந்துள்ளன.
இரண்டாம் கட்ட பயிற்சி நேற்றும், நேற்று முன்தினமும் நடந்தது. இதில், பங்கேற்ற ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், 'பயிற்சி மையத்திலேயே தபால் ஓட்டுப் பதிவு நடக்கும். அனைத்து பயிற்சியாளர்களும் அறையில் உள்ள பெட்டியில், ஓட்டுச்சீட்டை செலுத்த வேண்டும்.
'யாருக்கும் தபால் வாயிலாக ஓட்டுச்சீட்டை அனுப்ப வழிவகை ஏதும் செய்யப்படவில்லை. அதனால், அனைவரும் தங்களின் வாக்காளர் அடையாள அட்டை, தொகுதி பெயர், பாகம் எண், வரிசை ஆகிய விபரங்களுடன் வர வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒவ்வொரு தொகுதிக்கும், ஒவ்வொரு இடத்தில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதில், ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்தது, 1,000 பேர் பயிற்சியில் பங்கேற்றனர்.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஓட்டளிக்க ஒரு நிமிடமாவது தேவைப்பட்டது. ஆனால், நுாறு நுாறு பேராக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு அரை மணி நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனால், அரை மணி நேரத்தில் பாதி பேர் மட்டுமே ஓட்டளித்ததால், மற்ற பிரிவினரால் ஓட்டு செலுத்த முடிவில்லை.
அதேபோல், பயிற்சியிலும் முழுமையாக பங்கேற்க முடிவதில்லை. இதனால், பலர் ஓட்டளிக்காமல் வீட்டுக்கு சென்றுள்ளனர். இவர்களுக்கு அடுத்த பயிற்சியின் போது ஓட்டளிக்க, தேர்தல் கமிஷன் வாய்ப்பளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து, தேர்தல் நடத்தை அதிகாரிகள் கூறியதாவது:
ஒவ்வொரு தொகுதிக்கும், கண்காணிப்பு கேமராவுடன் கூடிய ஒரு அறை மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால், இந்த தாமதம் ஏற்பட்டது.
மேலும், ஓட்டுச்சாவடிக்கு முன் நிழல் தரும் வகையில் பந்தல் ஏதும் அமைக்கப்படாததால், தேர்தல் பணியாளர்கள் வெயிலில் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இந்த பிரச்னைகளை தேர்தல் கமிஷனின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, உரிய முடிவெடுப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
