இணைய தள இணைப்பு கட்டணத்தால் தலைமையாசிரியர்களுக்கு நெருக்கடி ஆசிரியர் சங்கம் புகார்
இணைய தள இணைப்பு கட்டணத்தால் தலைமையாசிரியர்களுக்கு நெருக்கடி ஆசிரியர் சங்கம் புகார்
ADDED : மார் 15, 2024 02:01 AM
சிவகங்கை:தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இணைய தளம் இணைப்பிற்கு பணம் செலுத்த தலைமையாசிரியர்களுக்கு அரசு நெருக்கடி கொடுப்பதாக ஆசிரியர் சங்கங்கள் புகார் தெரிவிக்கின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள 28 ஆயிரம் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி ஆய்வகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த பள்ளிகளில் 100 எம்பிபிஎஸ் வேகம் கொண்ட பிராட்பேண்ட் இணைப்பை அதிகபட்சம் ரூ.1,500 கட்டணத்துக்குள் நிறுவிக் கொள்ளலாம். அதற்கான தொகை பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு அனுப்பப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் இணையதள இணைப்பு வசதிகளை பி.எஸ்.என்.எல்., வாயிலாக மேற்கொள்ள வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது.
இந்த பணிகளுக்காக ஊழியர்கள் கூடுதல் பணம் கேட்பதாக தலைமையாசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயலாளர் சகாயதைனேஸ் கூறியதாவது: அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இணைய இணைப்புகளை அளிக்கும் வகையில் ஒரே சேவை வழங்குநராக தங்களை பரிந்துரைக்குமாறு பி.எஸ்.என்.எல்., கோரிக்கை விடுத்திருந்தது.
ஏற்கெனவே இணைய இணைப்பு பெற்றுள்ள பள்ளிகள் தவிர்த்து, புதிதாக இணைப்பு பெறவுள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் பி.எஸ்.என்.எல்., நிறுவனம் வாயிலாக பிராட்பேண்ட் இணைய சேவையை பெற்றுக் கொள்ள வேண்டுமென ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் எம்.ஆர்த்தி துறை இயக்குநர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருந்தார்.
அதனடிப்படையில் தலைமையாசிரியர்கள் இணைய தள இணைப்பு பணி மேற்கொண்டு வரும் நிலையில் பள்ளிகளின் துாரத்திற்கேற்ப 3000 முதல் 30 ஆயிரம் வரை செலவு ஏற்படும் என தொலைதொடர்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த பணத்தை கிராமத்தில் உள்ளவர்களிடம் நன்கொடை பெற்று செலுத்துமாறு கல்வி அதிகாரிகள் வாய்மொழியாக தெரிவித்துள்ளனர்.
இதனால் தலைமையாசிரியர்கள் புலம்பி வருகின்றனர். இணைய தள இணைப்பிற்கு தேவையான முழு பணத்தையும் தமிழக அரசு செலுத்த வேண்டும் என்றார்.

