டீக்கடை பெஞ்ச்: திட்ட அனுமதிக்கான கமிஷன் 3 மடங்கு உயர்வு!
டீக்கடை பெஞ்ச்: திட்ட அனுமதிக்கான கமிஷன் 3 மடங்கு உயர்வு!
ADDED : மார் 10, 2024 01:32 AM

''எம்.எல்.ஏ.,வை தடுத்து அமைச்சர் திறந்துட்டாருங்க...'' என்றபடியே, இஞ்சி டீக்கு ஆர்டர் கொடுத்தார் அந்தோணிசாமி.
''யாரை சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்பை, 42 லட்சம் ரூபாய்ல கட்டியிருக்காங்க... போன வருஷம் மே மாசமே இதை திறக்க, தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் ஏற்பாடு செஞ்சாருங்க...
''கட்டடத்துக்கு வாழை மரங்கள் கட்டி, திறப்பு விழாவுக்கு ஏற்பாடு நடந்துச்சு... இது, மாவட்ட முக்கிய புள்ளியின் கவனத்துக்கு போக, அதிகாரிகளுக்கு, 'அர்ச்சனை' நடந்துச்சுங்க...
''உடனே, பதறி போன அதிகாரிகள், வாழை மரங்களை கழற்றிட்டு, விழாவை ரத்து பண்ணிட்டாங்க... ஒன்பது மாசமா கட்டடம் பூட்டியே கிடந்துச்சுங்க...
''சமீபத்துல, கலெக்டர் ஆபீஸ்ல நடந்த விழாவுல, எம்.எல்.ஏ., எழிலரசனும் இருக்க, மாவட்ட அமைச்சர் அன்பரசன் கட்டடத்தை திறந்து வச்சாருங்க... இதனால, எம்.எல்.ஏ., தரப்பு கடுப்புல இருக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''பத்திரப்பதிவு அதிகாரிகள் வசமா மாட்டிண்டா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''திருவள்ளூர் மாவட்டம், புழல் ஒன்றியத்துல, விளாங்காடு பாக்கம் ஊராட்சி இருக்கோல்லியோ... இங்க நீர்நிலைகள், கோவில் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள்னு...
''மொத்தம், 33 சர்வே எண்கள்ல, 100 ஏக்கர் அளவுக்கு செங்குன்றம் சார் - பதிவாளர் ஆபீஸ்ல வீட்டுமனைகளா பத்திரப்பதிவு பண்ணி, அதுக்கு வருவாய் துறையில பட்டாவும் குடுத்திருக்கா ஓய்...
''இது பத்தி, அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வம் மீரான், பத்திரப்பதிவு துறை மற்றும் திருவள்ளூர் கலெக்டரிடம் புகார் கொடுத்தும், அவா கண்டுக்கல...
''இதனால, ஐகோர்ட்ல வழக்கு போட்டார்... விசாரிச்ச ஐகோர்ட், 'மேற்கண்ட வகை நிலங்கள், எதன் அடிப்படையில் பத்திரப்பதிவு செய்யப்பட்டதுன்னு எட்டு வாரத்துல, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கம் தரணும்'னு உத்தரவு போட்டுடுத்து... இதனால, பத்திரப்பதிவு பண்ணி குடுத்த அதிகாரிகள் பதற்றத்துல இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''நிலம் சம்பந்தமா, என்கிட்டயும் ஒரு தகவல் இருக்குல்லா...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''கட்டடங்களின் திட்ட அனுமதிக்கான லஞ்சம், அ.தி.மு.க., ஆட்சியை விட மூணு மடங்கு அதிகமாயிட்டு... முன்னாடி சதுர அடிக்கு 30 - 35 ரூபாய்னு இருந்ததை, இப்ப 100 ரூபாயா ஏத்திட்டாவ வே...
''இதனால, கோவையில தொழில் முனைவோர், கட்டுமான நிறுவனங்கள் நடத்துறவங்க ரொம்பவே பாதிக்கப்படுதாவ... துறையின் முக்கிய புள்ளி, இதுல தலையிடாம ஒதுங்கிட்டாரு வே...
''கோவையில, இதுக்காகவே சில புரோக்கர்கள் இருக்காவ... இவங்க தான், கட்சி நிதி, கிச்சன் கேபினட் நிதின்னு புதுசு புதுசா கணக்கு சொல்லி, ரேட்டை ஏத்தினது...
''திட்ட அனுமதி கேட்கிறவங்களை சென்னையில, குறிப்பிட்ட இடத்துக்கு போக சொல்லுதாவ... அங்க, சின்ன அறையில பணம் எண்ணுற ரெண்டு மிஷின்களை வச்சிட்டு சிலர் இருக்காவ வே...
''பணத்தை எண்ணி வாங்கிட்டு, அனுப்பிடுதாவ... அப்படியும், அனுமதியை உடனே தராம, இழுத்தடிச்சு தான் தர்றாவ... இதுல, 'சின்னவரின் நண்பர்'னு சொல்லிக்கிற ஒரு புரோக்கர் கோடிகள்ல புகுந்து விளையாடுதாரு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''சரவணன் வர்றாரு... பில்டர் காபி குடும் நாயரே...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

