ADDED : நவ 07, 2024 08:10 PM
சென்னை:தி.மு.க.,வுக்கு போட்டியாக, அ.தி.மு.க.,விலும் கள ஆய்வு பணிக்கு, 10 பேர் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில், தி.மு.க.,வில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும், மாவட்டவாரியாக சென்று, ஆட்சி மற்றும் கட்சி பணிகளை கள ஆய்வு செய்து வருகின்றனர்.
அதேபோல், அ.தி.மு.க.,விலும் கள ஆய்வு பணிகளை துவக்க, நேற்று முன்தினம் சென்னையில் நடந்த மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், முன்னாள் அமைச்சர்கள் இடம் பெற்றுள்ள 10 பேர் குழுவை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, நேற்று அறிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயகுமார், சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி, வரகூர் அருணாச்சலம் ஆகியோர், குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர், அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று, கட்சிப் பணிகளை கள ஆய்வு செய்து, அதன் விபரங்களை அடுத்த மாதம் 7ம் தேதிக்குள் அறிக்கையாக சமர்பிக்க உள்ளனர்.