ADDED : ஜன 30, 2026 07:13 AM

கடலுார்: நெல்லிக்குப்பம் அருகே லாரி டிரைவரை கொலை செய்ய முயன்ற வழக்கில், வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கடலுார் கோர்ட் தீர்ப்பளித்தது.
கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த எழுமேடு அகரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் வடிவேலன், 35; லாரி டிரைவர்.
இவருக்கும், அதே ஊரை சேர்ந்த சசி குமார், 24; என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டில் சசிக்குமார் தனது நண்பரான கீழ்குமாரமங்கலத்தை சேர்ந்த சிவனேஸ்வரனுடன் சேர்ந்து வடிவேலை தாக்கி, கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
புகாரின்பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து சசிகுமார், சிவனேஸ்வரனை கைது செய்தனர். இந்த வழக்கு கடலுார் இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடந்தது.
விசாரணை முடிந்த நிலையில் சசிகுமாருக்கு 10ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி பத்மாவதி தீர்ப்பளித்தார். சிவனேஸ்வரன் விடுவிக்கப்பட்டார்.
வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் அருணாச்சலம் ஆஜரானார்.

