மூன்று நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்: வானிலை மையம்
மூன்று நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்: வானிலை மையம்
ADDED : மே 09, 2025 01:00 AM
சென்னை:'தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில். ஒரு சில இடங்களில், மே 11 வரை, வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகம் பதிவாக வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில் நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக சேலம் மாவட்டம் சந்தியூர் பகுதியில், 11 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை, விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஆகிய இடங்களில், தலா, 8 செ.மீ., அரியலுார் மாவட்டம் திருமானுார், கோவை மாவட்டம் சின்னக்கல்லார், தேனி மாவட்டம் பெரியகுளம், நீலகிரி மாவட்டம் கின்னக்கோரை மற்றும் திண்டுக்கல் பகுதியில் தலா, 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில், தென்மேற்கு பருவமழை, வரும், 13ல் துவங்கலாம்.
தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில், பலத்த காற்று, இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில், வரும், 14ம் தேதி வரை மிதமான மழை தொடரலாம்.
ஒரு சில இடங்களில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கக் கூடும். அதிக வெப்பம், ஈரப்பதம் காரணமாக, வெளியில் செல்வோருக்கு, வெப்பம் சார்ந்த அசவுகரியம் ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக, ஈரோடு, திருத்தணி பகுதியில், 102 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 39 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. இதற்கு அடுத்தபடியாக, கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், பாளையங்கோட்டை ஆகிய இடங்களில், தலா, 100 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானது.