ADDED : ஏப் 18, 2026 04:32 AM

சென்னை: 'தமிழகத்தில் இன்று முதல், ஏப்., 21 வரை வெயிலின் தாக்கம், 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை: மஹாராஷ்டிரா மாநிலம் மரத்வாடா முதல், தமிழகத்தின் மன்னார் வளைகுடா வரை, கர்நாடகா, ராயலசீமா, தமிழகம் வழியாக, வளி மண்டலத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகளில், ஏப்., 21 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இதர பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும்.
தமிழகம், புதுச்சேரியில், இன்று முதல், ஏப்., 21 வரை, வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும். அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும்.
வெப்பநிலை அதிகரிப்பு, காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பு போன்ற காரணங்களால், வெளியில் செல்வோருக்கு அசவுகரியம் ஏற்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
