ADDED : ஜூலை 25, 2026 01:57 AM

சென்னை: 'தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில், இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை, கூடுதல் வெப்பம் பதிவாகலாம்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில் சில பகுதிகளில் நேற்று மிதமான மழை பெய்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்காலின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பான வெப்பநிலை நிலவியது.
மதுரை உள்ளிட்ட சில பகுதிகளில், இயல்பை விட கூடுதலாக வெப்பம் பதிவானது. இன்றும், நாளையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். சில இடங்களில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.
அதேசமயம், வேலுார், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருது நகர், துாத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில், சில இடங்களில் இயல்பை விட, 4 டிகிரி செல்ஷியஸ் வரை, கூடுதலாக வெப்பம் பதிவாகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
