இன்று 4 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை மையம் தகவல்
இன்று 4 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை மையம் தகவல்
ADDED : ஏப் 25, 2025 06:25 AM

சென்னை : 'தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்றும், நாளையும்(ஏப்., 25, 26) அதிகபட்ச வெப்பநிலை, 4 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாக வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
வளிமண்டல கீழடுக்கு பகுதியில் கிழக்கு, மேற்கு திசை காற்று சந்திப்பு நிலவு கிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 30ம் தேதி வரை மிதமான மழை தொடரலாம். தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை, 4 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகக் கூடும்.
அதிக வெப்பநிலை காரணமாக, வெளியில் செல்வோருக்கு அசவுகரியம் ஏற்படும். சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்ஷியசாக பதிவாகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி, அதிகபட்சமாக கரூர் பரமத்தி, வேலுார் ஆகிய நகரங்களில் தலா 104 டிகிரி பாரன்ஹீட், அதாவது 40 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானது. இதற்கு அடுத்தபடியாக, மதுரை விமான நிலையம், திருச்சி நகரத்தில் தலா 103 டிகிரி பாரன்ஹீட், அதாவது 39.5 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானது.
சென்னை மீனம்பாக்கம், தர்மபுரி, ஈரோடு, சேலம், தஞ்சாவூர், திருப்பத்துார், திருத்தணி நகரங்களில் தலா 100 டிகிரி பாரன்ஹீட், அதாவது 38 டிகிரி செல்ஷியஸ் வெயில் வாட்டியது.

