எல்லா தெருக்களுக்கும் கோவில் தேர் வராது தேரோடும் வீதிக்கு சென்று நாம் தரிசிக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
எல்லா தெருக்களுக்கும் கோவில் தேர் வராது தேரோடும் வீதிக்கு சென்று நாம் தரிசிக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
ADDED : செப் 07, 2025 01:00 AM
சென்னை:'எல்லா தெருக்களுக்கும் தேர் வராது; தேரோட்ட வீதிகளில் மட்டுமே தேர் செல்லும்; தேரை நாம் தான் போய் தரிசிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், புத்தகரம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர் தாக்கல் செய்த மனு:
எங்கள் கிராமத்தில், முத்து கொளக்கியம்மன் கோவில் உள்ளது. அப்பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்களை, கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்த அனுமதிப்பதில்லை. குறிப்பாக, தேரோட்டத்தின் போது, துாரத்தில் இருந்து கூட தரிசனம் செய்ய அனுமதிப்பது இல்லை.
அனுமதி தேவை ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், கடந்த 2000ம் ஆண்டு முதல், பட்டியலின மக்களை தரிசனம் செய்ய அனுமதிப்பது இல்லை.
சுதந்திரம் பெற்று, 75 ஆண்டுகள் கடந்தும், பட்டியலின மக்களை புத்தகரம் கிராமத்தில் உள்ள உயர் சமூகத்தினர், கோவிலுக்குள் அனுமதிப்பது இல்லை.
இதுதொடர்பாக, மாவட்ட அதிகாரிகளுக்கு பல முறை புகார் அளிக்கப்பட்டது. அமைதி பேச்சும் நடத்தப்பட்டது. இருப்பினும், மற்ற சமூகத்தினரை அனுமதிப்பது போல, பட்டியலின மக்களை அனுமதிப்பது இல்லை.
எனவே, மற்ற சமூகத்தினருடன் பட்டியலின மக்களையும், தேர் திருவிழாவில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி எம்.தண்டபானி முன், விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் எஸ்.குமா ரசாமி, டி.பார்வேந்தன் ஆஜராகி, 'முத்து கொளக்கியம்மன் கோவிலுக்குள் சென்று வழிபடவும், தேர் வெள்ளோட்டத்தின் போது, தலித் காலனி வரை வருவதற்கும் உத்தரவிட கோரி அளித்த மனுவை, மாவட்ட அதிகாரிகள் பரிசீலிக்கவில்லை' என்றனர்.
அறநிலையத் துறை தரப்பில் வழக்கறிஞர் கே.கார்த்திகேயன் ஆஜராகி, ''அனைத்து சமூகத்தினரும் கடவுளை வழிபட அனுமதிக்கப்படுகின்றனர். தேர் திருவிழா வழக்கமான பாதையில் நடக்கும்.
''மனுதாரர் கூறும் பகுதியில் உள்ள சாலை சரியில்லாததால், தேர் வெள்ளோட்டம் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி கூறியதாவது:
தேரோட்டம் நடத்துவதற்கென தனியாக ரத வீதிகள் இருக்கும். அந்த வீதிகளில் மட்டுமே தேர் செல்லும்; இதுதான், நம் பாரம்பரிய நடைமுறை. நாம் தான் தேரின் அருகில் சென்று வழிபட வேண்டும்.
நேரில் ஆய்வு சாலைகள் அகலமாக இருந்தாலும், எல்லா தெருக்களிலும் கோவில் தேரை கொண்டு செல்ல முடியாது; அதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.
இருப்பினும், அனைவரும் கயிற்றைப் பிடித்து, தேரை இழுக்க அனுமதிக்கப்பட வேண்டும். இந்த கிராமத்தில், தேர் செல்ல பாரம்பரியமாக பயன்படுத்தக்கூடிய தேரோட்ட வீதிகள் உள்ளனவா என்பது குறித்து, மாவட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இதற்கிடையில், அனைத்து மக்களும் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
விசாரணையை வரும், 15ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.