தமிழகத்தில் கோயில் தரிசனம், பிரசாத கட்டணங்களுக்கு ஜி.எஸ்.டி.,யில் விலக்கு
தமிழகத்தில் கோயில் தரிசனம், பிரசாத கட்டணங்களுக்கு ஜி.எஸ்.டி.,யில் விலக்கு
UPDATED : மே 28, 2025 06:07 AM
ADDED : மே 28, 2025 02:10 AM

மதுரை : தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ் உள்ள கோயில்களில் வசூலிக்கப்படும் தரிசனம், பிரசாத கட்டணங்களுக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வணிக ரீதியான பணியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.40 லட்சத்திற்கு மேல், சேவை பணியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சத்திற்கு மேல் இருந்தால் சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின்கீழ்(ஜி.எஸ்.டி.,) பதிவு எண் பெற வேண்டும்.
அறநிலையத்துறையின்கீழ் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்கள் ஜி.எஸ்.டி., எண் பெற்றுள்ளன. கோயில் வருவாயை கணக்கிட்டு அதற்கேற்ப வரி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதன்படி கோயில் கட்டடங்கள், மண்டபத்தில் இருந்து பெறப்படும் வாடகைக்கு 12 முதல் 18 சதவீதம் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும். அதேபோல் வாகன 'பார்க்கிங்' கட்டணம், டெண்டர், ஏலம் மூலம் பிரசாத விற்பனை, கோயில் மூலம் விற்கப்படும் பிறபொருட்களுக்கும் 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
வரிகளை அந்தந்த கோயில் நிர்வாகமே கணக்கிட்டு செலுத்திக்கொள்ள அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர் அனுமதி அளித்துள்ளார்.
அதேசமயம் கோயில் மூலம் நேரடியாக பிரசாதம் விற்றல், முடி இறக்குதல், தலைமுடி விற்பனை, தரிசனம், உற்ஸவக் கட்டணம், சிறப்பு தரிசன கட்டணங்களுக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

