திருச்சி மாவட்ட கோவில் கல்வெட்டுகள்: மத்திய தொல்லியல் துறை ஆய்வு
திருச்சி மாவட்ட கோவில் கல்வெட்டுகள்: மத்திய தொல்லியல் துறை ஆய்வு
ADDED : மார் 28, 2025 02:03 AM

திருச்சி மாவட்டத்தில், பழமையான கோவில்களில் உள்ள கல்வெட்டுகளை, மத்திய தொல்லியல் துறை பெங்களூரு பிரிவு ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
திருச்சி மாவட்ட கோவில்களில், கல்வெட்டுகளை ஆவணப்படுத்தும் பணியில், கல்வெட்டு ஆய்வாளர் சாருமதி நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ஒன்றியத்தில் உள்ள அல்லுார், பெருகமணி ஊர்களில் உள்ள பழமையான கோவில்களை ஆய்வு செய்து வருகிறார்.
அவர் கூறியதாவது:
மத்திய தொல்லியல் துறையினர், 100 ஆண்டுகளுக்கு முன், திருச்சி மாவட்டம், அல்லுாரில் உள்ள பஞ்சநதீஸ்வரர் கோவிலில் உள்ள, 12 கல்வெட்டுகளை ஆய்வு செய்து, ஆவணப்படுத்தி உள்ளனர். அதே கோவிலில், அறியப்படாத கல்வெட்டுகள் உள்ளதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு ஆய்வு செய்தோம். அதில், ஒரு முழு கல்வெட்டும், மூன்று துண்டு கல்வெட்டுகளும் கண்டறியப்பட்டு உள்ளன.
ராஜராஜ சோழனின் மூதாதையர்களான பராந்தக சோழன் உள்ளிட்டோர் இந்த கோவிலின் பூஜைக்காகவும், இங்கு பூஜை செய்த பிராமணர்களுக்காகவும், நிலங்களை தானம் செய்துள்ளனர். ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் உள்ளிட்டோரும் பராமரித்துஉள்ளனர்.
திருச்சியில் இருந்து 22 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள பெருகமணி கிராமத்தில், அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்தோம். அதில், நான்கு கல்வெட்டுகள் கண்டறியப்பட்ட நிலையில், ஒன்று மட்டுமே நல்ல நிலையில் உள்ளது.
அது, 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, விஜயநகர மன்னர்களின் வழித்தோன்றலான கம்பண்ணன், அந்த கோவிலின் பூஜை செலவுகளுக்காக அளித்த நிலதானம் செய்த குறிப்பு உள்ளது. அந்த நிலத்தின் எல்லைகளும் குறிப்பிடப்பட்டுஉள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -