'ஸ்மார்ட் மீட்டர்' கொள்முதல் மின்வாரிய டெண்டர் செல்லும்
'ஸ்மார்ட் மீட்டர்' கொள்முதல் மின்வாரிய டெண்டர் செல்லும்
UPDATED : பிப் 01, 2024 02:42 AM
ADDED : பிப் 01, 2024 12:51 AM

சென்னை: 'ஸ்மார்ட் மீட்டர்' கொள்முதலுக்காக, மின் வாரியம் பிறப்பித்த டெண்டர் செல்லும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனைத்து மாநிலங்களிலும், மின் பயன்பாட்டை கணக்கிட ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அமல்படுத்த, மத்திய அரசு அறிவுறுத்தியது.
அதன்படி, ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கு, கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில், தமிழக மின் வாரியம் உலகளாவிய டெண்டர் கோரியது.
குறைந்த தொகையில் டெண்டர் கோரும் வகையில், எதிர் ஏலம் நடைமுறை பின்பற்றப்படும் என, அறிவிக்கப்பட்டது.
ரத்து செய்தார்
இந்த டெண்டர் முறையை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் ஐதராபாத்தைச் சேர்ந்த, 'எபிகா என்ஸ்மார்ட் சொலுசன்ஸ்' நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, சட்டத்தின் வரம்பை மீறுவதாக டெண்டர் முறை இருப்பதால், அதை ரத்து செய்து உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, மின் வாரியம் மேல்முறையீடு செய்தது. இம்மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.
மின் வாரியம் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் அபிேஷக் மனு சிங்வி, பி.வில்சன், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகினர்.
மனுவை விசாரித்த முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
டெண்டரை இறுதி செய்ய பின்பற்றும் நடைமுறை, அதை பிறப்பித்த அதிகாரியின் தனிப்பட்ட உரிமையை பொறுத்தது. சட்டமோ, விதிகளோ, டெண்டர் முறையை பரிந்துரைக்கவில்லை.
மின் வாரியம் வகுத்த டெண்டர் நடைமுறைக்கு, சட்டத்தில், விதிகளில் தடை இருப்பதாக கூற முடியாது.
பறிக்கவில்லை
எனவே, டெண்டர் நடைமுறையை நிர்ணயிக்க, அதை வெளியிடும் அதிகாரிக்கு உள்ள உரிமையை, எந்த சட்டமும், விதிகளும் பறிக்கவில்லை.
மின் வாரியம் பின்பற்றும் டெண்டர் முறை, சம்பந்தப்பட்டவர்களை கட்டுப்படுத்தும். அந்த நடைமுறை, சட்டத்தை, விதிகளை மீறுவதாக இல்லை.
மாறாக, சொந்த நடைமுறையை பின்பற்ற, டெண்டர் பிறப்பிக்கும் அதிகாரிக்கு, சட்டத்தில், விதிகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.