ADDED : அக் 14, 2024 04:16 AM
சென்னை: அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிதாக, 1,641 பஸ்களை தயாரித்து வழங்க விரும்பும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என, சாலை போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தமிழகத்தில் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் வகையிலும், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலும், 1,614 புதிய பஸ்கள் வாங்க, ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. 'ஏசி' வசதி இல்லாத, பி.எஸ்., - 6 வகை வாகனங்களை வழங்க, தகுதியான நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த, 1,614 பஸ்களை, எம்.டி.சி.,க்கு, 245; விழுப்புரம் கோட்டத்துக்கு, 347; சேலம், கும்பகோணம் கோட்டங்களுக்கு தலா, 303; கோவை கோட்டத்துக்கு, 115; மதுரை கோட்டத்துக்கு, 251; நெல்லை கோட்டத்துக்கு, 50 பஸ்கள் என, பிரித்து வழங்க வேண்டும்.
டெண்டரில் தேர்வாகும் நிறுவனம், ஒப்புதல் பெற்ற முதல் மாதத்தில் இருந்தே பஸ்களை வழங்க வேண்டும். ஒரு மாதத்துக்கு, 300 பஸ்களையாவது வழங்கும் தகுதியுடைய நிறுவனங்கள், 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். டெண்டர் கோரும் அவகாசம், டிசம்பர், 2ல் முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.