முட்டுக்காட்டில் கலைஞர் அரங்கம் ரூ.487 கோடியில் கட்ட 'டெண்டர்'
முட்டுக்காட்டில் கலைஞர் அரங்கம் ரூ.487 கோடியில் கட்ட 'டெண்டர்'
ADDED : அக் 14, 2024 04:20 AM
சென்னை: 'சென்னையில், 5,000 பேருக்கு மேற்பட்டோரை ஒன்றாக அமரவைத்து விழா நடத்த, வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகளுடன் அரங்கம் இல்லை. அதனால், பெரிய அளவில் நிகழ்ச்சிகளை நடத்தும்போது, இடநெருக்கடி மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, அரசு வாயிலாக முட்டுக்காட்டில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டப்படும்' என, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதற்காக, 487 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிதியில், நான்கு கட்டடங்களாக பன்னாட்டு அரங்கம் கட்டுமானம் நடைபெற உள்ளது. அதில், 15,000 பேரும் அமரும் வகையில் பொருட்காட்சி அரங்கமும் இடம் பெறும். அதற்கு மட்டும், 127 கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளது.
மேலும், 10,000 பேர் அமரும் வகையில், 108 கோடி ரூபாயில் கலையரங்கம், தலா 5,000 பேர் அமரும் வகையில் இரண்டு நிகழ்ச்சி அரங்கங்கள் தலா, 102 கோடி ரூபாயில் கட்டப்படவுள்ளன.
பன்னாட்டு அரங்கில், 1,000 கார்களை நிறுத்தும் வகையில் பிரமாண்ட வாகன நிறுத்தம், எஸ்கலேட்டர் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்படவுள்ளன.
பணிகளை குறித்த காலத்திற்குள் விரைந்து முடிப்பதற்காக, நான்கு பேக்கேஜ்களாக ஒப்பந்ததாரர் தேர்வுக்கான அறிவிப்பை, சென்னை மண்டல பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது. ஒப்பந்ததாரர் தேர்வு, வரும், 16ம் தேதி நடக்க உள்ளது.