ரூ.3 கோடியில் ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் திருச்சியில் அமைக்க 'டெண்டர்'
ரூ.3 கோடியில் ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் திருச்சியில் அமைக்க 'டெண்டர்'
ADDED : ஜன 24, 2025 12:23 AM

சென்னை:திருச்சி மாவட்டம் சூரியூரில், 3 கோடி ரூபாயில் நிரந்தர ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைக்க, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒப்பந்தம் கோரியுள்ளது.
திருச்சி மாவட்டம் சூரியூரில், ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப் பொங்கலன்று ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும்.
அருகில் உள்ள புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலுார், கரூர், பெரம்பலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து போட்டி காளைகள் பங்கேற்கும். இந்நிலையில், பெரிய சூரியூரில் 3 கோடி ரூபாய் செலவில் ஜல்லிக்கட்டு மற்றும் பல்வேறு விளையாட்டுகளை நடத்தும் வகையில் ஸ்டேடியம் அமைக்கப்பட உள்ளது.
அதற்கான ஒப்பந்தப்புள்ளி தற்போது கோரப்பட்டுள்ளது. அதில், பிப்., 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஒப்பந்தம் பெற்ற நிறுவனம், 270 நாட்களில் பணியை முடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், திருவெறும்பூர் தொகுதியில் உள்ள எலந்தைப்பட்டியில், திருச்சி ஒலிம்பிக் அகாடமி அமைப்பதற்கான அடிக்கல்லை, துணை முதல்வர் உதயநிதி கடந்த 7ம் தேதி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நாட்டினார். அதற்கான கட்டுமானப் பணிகளை, அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர்.