அனுமதியின்றி கட்டப்பட்ட மசூதி போராட்ட அறிவிப்பால் பதற்றம்
அனுமதியின்றி கட்டப்பட்ட மசூதி போராட்ட அறிவிப்பால் பதற்றம்
ADDED : அக் 24, 2025 02:00 AM

பல்லடம்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த, அறிவொளி நகர், குருவாயூரப்பன் நகர் குடியிருப்பு பகுதியில், புதிதாக மசூதி கட்டப்பட்டது. அந்த மசூதி, அனுமதியின்றி கட்டப்பட்டு உள்ளதாக, இப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், பல்லடம் தாசில்தார் சபரியை சந்தித்து, நேற்று முன்தினம் மனு அளித்தனர்.
இந்த நிலையில், அந்த மசூதி, இன்று திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மசூதியை திறக்க அனுமதி அளித்தால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பொதுமக்கள் எச்சரித்தனர்.
மேலும், பல்லடம் தாலுகா அலுவலகத்தை நேற்று அவர்கள் முற்றுகையிட உள்ளதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து, அங்கு அதிவிரைவு படை போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தாசில்தார் சபரி தலைமையில் நடந்த அமைதி பேச்சில், 'வழிபாட்டு தலம் அமைக்க வேண்டும் என்றால், கலெக்டர் மற்றும் டி.டி.சி.பி., அனுமதி பெற வேண்டும். அனுமதி கிடைக்கும் வரை, வழிபாடு நடத்தக்கூடாது.
'தேவையானால், துவக்க விழா மட்டும் நடத்திக் கொள்ளலாம்' என தெரிவிக்கப்பட்டது. அதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
இதற்கிடையே, ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், இன்று காலை அந்த பகுதிக்கு வருவதாக கூறப்படுகிறது. அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள மசூதியை முற்றுகையிட்டு, அவரது தலைமையில் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அர்ஜுன் சம்பத்தை கைது செய்யலாமா என போலீஸ் தரப்பில் யோசிக்கின்றனர். இதையடுத்து, அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

