பூவந்தியில் கரையான் அரித்த ரூ.1 லட்சம்: ரிசர்வ் வங்கி மூலம் மீட்க முயற்சி
பூவந்தியில் கரையான் அரித்த ரூ.1 லட்சம்: ரிசர்வ் வங்கி மூலம் மீட்க முயற்சி
ADDED : மே 07, 2025 06:46 PM

சிவகங்கை: திருப்புவனம் அருகே கிளாதிரியில் கரையான் அரித்த ஒரு லட்ச ரூபாய் நோட்டுக்களுக்கு ஈடாக பணம் பெற்றுத்தர கலெக்டரின் முயற்சியால் முன்னோடி வங்கியினர் ரிசர்வ் வங்கிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே கிளாதிரி கக்கனாம்பட்டி குமார் மனைவி முத்துக்கருப்பி 30. இவருக்கு 2 மகள்கள், மகன் உள்ளனர். தினக்கூலியாக வேலை பார்த்து வரும் இவர், கூரை வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தனது மகள்களின் காதணி விழா செலவிற்காக தினமும் சம்பாதிக்கும் பணத்தில் சிறிய தொகையை தகர உண்டியலில் போட்டு மண்ணிற்குள் புதைத்து வைத்துள்ளார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன் பணத்தை எடுத்து எண்ணியுள்ளார். அப்போது ஒரு லட்ச ரூபாய் வரை இருந்துள்ளது. தொடர்ந்து மழையின் காரணமாக தகர பெட்டிக்குள் கரையான்கள் புகுந்து, ரூபாய் நோட்டுக்களை அரித்துள்ளன. இதனால் தகர பெட்டியில் இருந்த ரூ.500, 200, 50, 20 நோட்டுக்கள் அரிக்கப்பட்டு கிடந்தன. ஒரு ஆண்டிற்கு மேலாக உண்டியலில் சேமித்த ரூ.1 லட்சத்தை கரையான் அரித்ததால், பணத்தை இழந்து குழந்தைகளுக்கு காதணி விழா நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக புலம்பி தவித்தார்.
இது குறித்து அறிந்த சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித், சிவகங்கை தாசில்தார் சிவராமனிடம் தெரிவித்து, முன்னோடி வங்கி மூலம் ரிசர்வ் வங்கியிடம் கருணை அடிப்படையில் பணத்தை பெற்றுத்தர முயற்சிக்க கூறினார். பாதிக்கப்பட்ட முத்துகருப்பி சிவகங்கையில் உள்ள முன்னோடி வங்கிக்கு தாசில்தாருடன் சென்றார். வங்கி மேலாளர் பிரவீன்குமார், அந்த நோட்டுக்களை பார்வையிட்டு ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்வதாக கூறி, அழைக்கும் போது பணத்துடன் ரிசர்வ் வங்கிக்கு வர வேண்டும் என அப்பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கருணை அடிப்படையில் சேதமான பணத்தின் உரிய மதிப்பு தொகையை பெற்றுத்தர முயற்சிப்பதாக முன்னோடி வங்கியினர் தெரிவித்தனர்.

