விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து; 5 பெண்கள் உட்பட 10 பேர் உடல் கருகி பலி
விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து; 5 பெண்கள் உட்பட 10 பேர் உடல் கருகி பலி
ADDED : பிப் 18, 2024 02:30 AM

சாத்துார்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமுத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில், ஐந்து பெண்கள் உட்பட 10 பேர் பலியாகினர்; நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்; ஆறு அறைகள் தரைமட்டமாகின.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்த விக்னேஷ், 45, என்பவருக்கு சொந்தமாக ராமுத்தேவன்பட்டியில் வின்னர் பட்டாசு ஆலை செயல்படுகிறது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில், 60 அறைகளில், 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தொழிலாளர்கள் நேற்று வழக்கம் போல பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மதியம், 12:30 மணிக்கு ஒரு அறையில் பட்டாசு தயாரித்தபோது, மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வால் திடீரென வெடி விபத்து ஏற்பட்டு, ஆறு அறைகள் தரைமட்டமாகின.
இந்த வெடி விபத்தில் பணியில் இருந்த ரமேஷ், 26, கருப்பசாமி, 29, டி.மேட்டூர் அம்பிகா, 30, சாந்தா, 43, முருகஜோதி, 50, முத்து, 45, குருசாமி, 50, ஜெயா, அபேராஜ், முனியசாமி, 30, என, 10 பேர், உடல் கருகி உயிரிழந்தனர்.
மேலும் நான்கு பேர், படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தென்மண்டல டி.ஐ.ஜி., ரம்யா பாரதி, கலெக்டர் ஜெயசீலன், மதுரை எஸ்.பி., சோமசுந்தரம், ரகுராமன் எம்.எல்.ஏ., ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கலெக்டர் ஜெயசீலன் கூறியதாவது:
பட்டாசு ஆலை வெடி விபத்துக்கு, அளவுக்கு அதிகமான ரசாயன மூலப்பொருட்கள், விதிமீறி சேமித்து வைக்கப்பட்டது தான் காரணம். மனித தவறு காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்து, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விசாரணை நடத்தி, முழுமையான ஆய்வறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்டம் முழுதும் பட்டாசு ஆலைகள் விதிமீறலை தடுக்க, நான்கு குழுக்கள் கண்காணித்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.