சாத்தூர் அருகே பயங்கர வெடி விபத்து; தொழிலாளர்கள் சிக்கி இருக்கலாம் என அச்சம்
சாத்தூர் அருகே பயங்கர வெடி விபத்து; தொழிலாளர்கள் சிக்கி இருக்கலாம் என அச்சம்
ADDED : செப் 28, 2024 08:25 AM

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று (செப்.,28) பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசு ஆலையில் வட மாநில தொழிலாளர்கள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழ ஒட்டம்பட்டியில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று (செப்.,28) காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசு தொடர்ந்து வெடித்து கொண்டிருப்பதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் நீண்ட நேரமாக போராடி வருகின்றனர். ஆலையில் வட மாநில தொழிலாளர்கள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தின் அதிர்வுகள் 15 கி.மீ., தொலைவுக்கு உணரப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
பட்டாசுகளை இறக்கி வைக்கும் போது உராய்வு காரணமாக விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வெடிவிபத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.