தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேரு, அவர் தம்பி, நண்பர் ஆபீஸ், வீடுகளில் மீண்டும் சோதனை!: நகராட்சி நிர்வாகத்தில் ரூ.1020 கோடி மோசடி தொடர்பாக புகார்

தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேரு, அவர் தம்பி, நண்பர் ஆபீஸ், வீடுகளில் மீண்டும் சோதனை!: நகராட்சி நிர்வாகத்தில் ரூ.1020 கோடி மோசடி தொடர்பாக புகார்

தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேரு, அவர் தம்பி, நண்பர் ஆபீஸ், வீடுகளில் மீண்டும் சோதனை!: நகராட்சி நிர்வாகத்தில் ரூ.1020 கோடி மோசடி தொடர்பாக புகார்

13


UPDATED : அக் 30, 2026 12:33 AM

ADDED : அக் 29, 2026 11:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2026 12:33 AM ADDED : அக் 29, 2026 11:09 PM

13


13
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் குழு -

தி.மு.க., ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனம் மற்றும் 'டெண்டர்' பணிகளில் நடந்த 1,020 கோடி ரூபாய் ஊழல் புகார் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் நேரு, அவரது தம்பிகள், நண்பர்கள் உள்ளிட்டோர் வீடு, அலுவலகங்கள் என, 25 இடங்களில் இன்று (அக்.,29) லஞ்ச ஒழிப்பு போலீசார் மீண்டும் சோதனை நடத்தினர்; 241 ஆவணங்களை கைப்பற்றினர்.

Image 1637846

கடந்த தி.மு.க., ஆட்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருந்தவர் கே.என்.நேரு. இவர் தற்போது திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.

கோரிக்கைகள்


அவர் அமைச்சராக இருந்தபோது, துறையில் பணி நியமனம் மற்றும் பணியிட மாறுதலுக்கு லஞ்சமாக, 634 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

அதேபோல, டெண்டர் பணிகளில், 1,020 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதாக, ஏராளமான ஆவணங்களுடன் அரசுக்கும், டி.ஜி.பி., அலுவலகத்திற்கும், அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்று கடிதங்களை எழுதினர்.

வழக்குப்பதிவு செய்து, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் கூறியிருந்தனர். ஆனால், அந்த கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டன.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, விஜய் முதல்வராக பதவியேற்றதும், நேரு துறையில் நடந்த ஊழல் தொடர்பாக, கடந்த செப்., 4ம் தேதி, நேரு, அவரது தம்பிகள் மணிவண்ணன், ரவிச்சந்திரன், நேருவின் நெருங்கிய கூட்டாளி கவிபிரசாத், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாதவரம் சுதர்சனம், எபினேசர் உட்பட 13 பேர் மீது, 14 பிரிவுகளில், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த கவிபிரசாத், வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்றார். அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது, நேரு துறையில் நடந்த ஊழல்கள் குறித்து, அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் தொடர் விசாரணை நடக்கிறது.

முக்கிய ஆவணங்கள்


மேலும், நேரு துறையில் நடந்த ஊழல் தொடர்பாக, ஏற்கனவே இரண்டு முறை நேரு, அவரது தம்பிகள் உள்ளிட்டோர் வீடுகளில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

நேருவின் தம்பிகள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் தலைமையில், டி.வி.எச்., என்ற கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருவதும், அந்நிறுவனம் வாயிலாகத்தான் பணம் கைமாறி இருப்பதும் தெரியவந்துள்ளது.

கடந்த 2021 - 2025 வரை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர்கள் மற்றும் திட்டப் பணிகளை, வேண்டிய நபர்களுக்கு ஒதுக்கீடு செய்து, 1,020 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாக போலீசார் குற்றஞ்சாட்டினர்.

ஒப்பந்ததாரர்களிடம் இருந்து கட்சி நிதியாக, 10 சதவீதம் வரை வசூலித்துள்ளதாகவும், 2,538 உதவி மற்றும் இளநிலை பொறியாளர்கள் நியமனம் மற்றும் பணியிட மாறுதலுக்கு, 634 கோடி ரூபாய் வசூலித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த ஊழல்கள் தொடர்பாக, நேரு உட்பட ஏழு பேர் மீது மேலும், ஒரு வழக்கு பதிவு செய்து,சென்னை, திருச்சி, கோவை, வேலுார், சேலம், நாமக்கல் உட்பட, நேரு, அவரது தம்பிகள் ரவிச்சந்திரன், மணிவண்ணன், நண்பர்கள் வீடு, அலுவலகங்கள் என, 25 இடங்களில் இன்று மீண்டும் சோதனை நடத்தி, 241க்கும் மேற்பட்ட ஆவணங்களை, லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

திருச்சி தில்லை நகரில் உள்ள நேரு வீட்டில், நேற்று காலை 6:30 மணியில் இருந்து சோதனை நடந்தது. அப்போது, வீட்டில் நேரு மற்றும் அவரின் குடும்பத்தார் இருந்தனர். சோதனை நடந்தபோதே, நேரு நிதானமாக காலை உணவு சாப்பிட்டார்.

அதேபோல, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நேருவின் தம்பி ரவிச்சந்திரன் வீடு, அலுவலகத்திலும் சோதனை நடந்தது. கோவை சிங்காநல்லுாரில் உள்ள நேருவின் மற்றொரு தம்பி மணிவண்ணன் வீடு, வேலுார் தெற்கு மாவட்ட தி.மு.க., செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான நந்தகுமாரின் காட்பாடி காந்தி நகரில் உள்ள வீடு, நாமக்கல் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராமலிங்கத்தின் வீடு, நாமக்கல்- மோகனுார் சாலையில் உள்ள துரை என்பவர் வீட்டிலும் சோதனை நடந்தது.

காட்பாடி, காந்தி நகர், விருதம்பட்டு போலீஸ் நிலையம் எதிரே உள்ள, திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் மற்றும் தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., நந்தகுமார் கூறுகையில், ''காட்பாடியில் என் வீட்டில் நடந்த சோதனையில், எந்த பொருளும் கிடைக்கவில்லை என, போலீசார் எழுதிக் கொடுத்துவிட்டு சென்று விட்டனர்,'' என்றார்.

என்னிடம் எதுவும் கேட்கவில்லை:முன்னாள் அமைச்சர் நேரு விளக்கம்

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனைக்கு பின் நேரு கூறியதாவது:

பழைய வழக்கு அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். கடந்த முறை, 10 இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், இந்த முறை, அதை விட கூடுதலான இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

சோதனையின்போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் என்னிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை; சில ஆவணங்கள் மற்றும் என் சகோதரர் மணிவண்ணன் தொழில் தொடர்புடைய இரண்டு 'லேப்டாப்'பை எடுத்துச் சென்றுள்ளனர்.

ஜெயலலிதா ஆட்சியில் என் மீது தொடர்ந்த நில அபகரிப்பு வழக்கை சட்டரீதியாக எதிர்கொண்டது போல், இந்த வழக்கையும் எதிர்கொள்வேன். தி.மு.க., எப்போதும் வெற்றி, தோல்விகளை கண்டு கவலைப்படாத கட்சி. இவ்வாறு அவர் கூறினார்.

இன்னும் வேகமாக வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றுவோம்: ஸ்டாலின்



தி.மு.க., முதன்மை செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு வீட்டில், லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனைக்கு, அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தி.மு.க., முன்னாள் அமைச்சர்களை குறி வைத்து நடத்திக் கொண்டிருக்கும், 'வெற்றி பழிவாங்கல் அரசியல்' திட்டம், வழக்கம் போல் சட்டத்தின் முன் தோற்று, மக்கள் முன் தலைகுனிந்து நிற்கும்.

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கான, 'ரீல்ஸ்' வீடியோக்களை தயாரிக்கவும், முதல்வர் மேடையில் 'பஞ்ச்' வசனங்கள் என்ற பெயரில் காட்டுக்கத்து கத்தவும் நடத்தப்படும் இந்த ரெய்டுகளை கண்டு, தி.மு.க.,வின் கடைக்கோடி தொண்டரின் கால் நகம் கூட அஞ்சாது.

சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, துருப்பிடித்து விட்ட நிர்வாகம், வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு என, மக்களை பாதிக்கும் த.வெ.க., ஆட்சி கண்டு, தமிழகம் மட்டுமல்ல; இந்தியாவே எள்ளி நகைக்கிறது. இதை எல்லாம் மறைக்க, தி.மு.க.,வினருக்கு வாய்பூட்டு போடலாம் என நினைக்கிறீர்கள். இனி இன்னும் வேகமாக, த.வெ.க., அரசின் வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us