வீடு, தொழிற்சாலைகளில் 'ஒயரிங்' பணி முடிந்ததும் சோதனை சான்று கட்டாயம்
வீடு, தொழிற்சாலைகளில் 'ஒயரிங்' பணி முடிந்ததும் சோதனை சான்று கட்டாயம்
ADDED : மே 16, 2025 11:27 PM
சென்னை:தமிழகத்தில் வீடு, தொழிற்சாலை கட்டுமானம் மேற்கொள்ளும் போது, 'ஒயரிங்' தொடர்பான பணிகள் செய்யப்படுகின்றன. இந்த பணிகளை விபத்து ஏற்படாமல் எப்படி செய்ய வேண்டும் என்பதற்கான விதிகளை, மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உருவாக்கியுள்ளது.
எனவே, ஒயரிங் பணிகள் முடிவடைந்ததும், விதிகளுக்கு உட்பட்டு செய்யப்பட்டு உள்ளனவா என்பதை உறுதி செய்ய, அங்கீகரிக்கப்பட்ட ஒயரிங் பணி ஒப்பந்ததாரர்களிடம் இருந்து சோதனை அறிக்கையை, மின் வாரியம் பெற வேண்டும்.
அந்த அறிக்கை ஒழுங்காக வாங்கப்படுவதில்லை என்ற புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, ஒயரிங் பணி முடிவடைந்ததும், விதிகளுக்கு உட்பட்டு செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்ய, மின் வாரிய அதிகாரிகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஒயரிங் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து சோதனை அறிக்கை கட்டாயம் வாங்குமாறு, தற்போது, மின் வாரியத்திற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த அறிக்கையை, எந்த ஒரு நிலையிலும் தேவைப்படும் பட்சத்தில் சமர்ப்பிக்க தயாராக இருக்கும்படியும் தெரிவித்துள்ளது.
இதனால், மின் விபத்து ஏற்படும் போது, சான்றளிக்கப்பட்டது யார் என்பதை கண்டறிய முடியும். இதனால், சான்று வழங்குபவர் பொறுப்புடன் செயல்பட முடியும்.