ADDED : செப் 03, 2025 11:11 PM
சென்னை:ஆசிரியர்கள் 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து, தலைமைச் செயலர் முருகானந்தம், சட்டத்துறை மற்றும் கல்வித் துறை அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தினார்.
பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் தொடரவும், பதவி உயர்வுக்கும், ஆசிரியர் தகுதித் தேர்வான 'டெட்' தேர்வில், தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதனால், தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசு தரப்பில் எடுக்க வேண்டிய, அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து, நேற்று, சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலர் முருகானந்தம், சட்ட நிபுணர்கள் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது:
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால், தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர்.
மீண்டும் நீதிமன்றத்தை நாடுவது, அது சாத்தியமில்லாத போது, ஆண்டுக்கு இரண்டு முறை, சிறப்பு தகுதித் தேர்வுகளை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
முதல்வர், வெளிநாட்டு பயணத்தை முடித்து தாயகம் திரும்பியதும், இது குறித்து முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.