ADDED : பிப் 13, 2024 04:28 AM

சென்னை: 'தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், பொய்களை தொகுத்து வழங்கிய ஒரு உரையை கவர்னர் கட்டாயம் வாசிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நகைமுரண்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: இந்த ஆண்டு, கவர்னர் உரையில் மிகுதியாக அடுக்கப்பட்ட பொய்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் கடமை பா.ஜ.,வுக்கு உள்ளது.
ஸ்டாலின், 2018ல், 'நான் தொடக்கத்திலே சொன்னது மாதிரி, இந்த கவர்னர் உரை என்பது மஸ்கோத் அல்வாவாக அமைந்துள்ளது' என்றார். 2019ல், 'அரசு எழுதி தந்திருக்க கூடிய, 'பெயிலியர் பேப்பர்களை' கவர்னர் சட்டசபையில் படித்து கொண்டிருக்கிறார்' என்றார்.
கடந்த 2020ல், 'ஆளுங்கட்சியால் தயாரிக்கப்பட்டுள்ள கவர்னர் உரையை நாங்கள் புறக்கணிக்க முடிவு எடுத்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்' என்றார். 2021ல், வெளிநடப்பு செய்ததையும் தி.மு.க.,வினர் தற்போது மறந்து விட்டனர்.
கடந்த காலங்களில் கவர்னர் உரையை புறக்கணித்தும், விமர்சித்தும் வெளிநடப்பு செய்த தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், பொய்களை தொகுத்து வழங்கிய ஒரு உரையை கவர்னர் கட்டாயம் வாசிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நகைமுரண்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், தமிழகத்தில் தொழில்முனைவோர் பல இன்னல்களுக்கு ஆளாகி உள்ளதை பல முறை பா.ஜ., முன் வைத்தும் தீர்வு காணவில்லை. வசூலில் மட்டுமே குறியாக இந்த அரசு செயல்படுகிறது.
உலக முதலீட்டாளர மாநாட்டில், 6.60 லட்சம் கோடி ரூபாய் முதலீடு கொண்டு வந்துள்ளதாக பெருமைப்படும் முன், உ.பி., 33 லட்சம் கோடி ரூபாய்; குஜராத், 26 லட்சம் கோடி ரூபாய்; கர்நாடகா, 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துஉள்ளன.
இவ்வாறு இருக்கும் போது, முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலம் என்பது தவறான தகவல் என்பதை தி.மு.க., உணர வேண்டும். தி.மு.க., அரசு தயாரித்த கவர்னர் உரையில் அடுக்கடுக்கான பொய்கள் உள்ளன.
கவர்னர் உரையில், ஒரே ஒரு குறை தான். கிளாம்பாக்கம் கருணாநிதி பஸ் நிலையத்தின் சாதனை, இந்த கவர்னர் உரையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.
அது, இடம்பெறாமல் போனது உள்ளபடியே மிகப்பெரிய ஏமாற்றம்.
சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு, பேசிய விதத்தை கண்டு வியப்படைந்தேன். பயன்படுத்தும் முன் ஒரு முறைக்கு, இருமுறை யோசிக்கும் மொழியை சபாநாயகர் பயன்படுத்துகிறார். தமிழக கவர்னரை, மிரட்டுகிறாரா?
அப்பாவு, 'பி.எம்.கேர்ஸ்சில் பணம் தேவை' என்று கூறுவதை விட தி.மு.க.,வின் முதல் குடும்பம் கொள்ளை அடித்த பணத்தை திரும்ப கேட்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.