ADDED : ஜன 26, 2025 05:39 AM

கடலுார்: வடலுாரில், தைப்பூச ஜோதி தரிசன ஏற்பாடுகளை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.
கடலுார் மாவட்டம்,வடலுார் வள்ளலார் சத்திய ஞான சபையில், தைப்பூச ஜோதி தரிசனம்வரும்11ம் தேதி நடக்கிறது.10ம் தேதி துவங்கி 13ம் தேதி வரை நடைபெறும் விழாவில், லட்சக்கணக்கான மக்கள் கூடுவர் அதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகளை நேற்று அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய பாதுகாப்பு ஏற்பாடுகள்,அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவ குழு, தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள், காவல்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிநீர், கழிவறை, குளியலறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. நடமாடும் கழிவறை வசதி உள்ளது.
முக்கிய இடங்களில் மின் விளக்குகள் ஜெனரேட்டர் வசதியுடன் அமைக்கப்படுகிறது.
சி.சி.டி.வி., கேமராக்கள் சபை முழுவதும் பொருத்தப்படுகிறது. காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட 2 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, வடலுார் நகரமன்ற தலைவர் சிவக்குமார், போக்குவரத்துக் கழக கடலுார் மண்டல பொது மேலாளர் ராகவன், நகராட்சி கமிஷனர் ரஞ்சிதா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.