ராகு காலத்தில் சுவாமிக்கு தாலி 9 பட்டாச்சாரியார்களுக்கு 'மெமோ'
ராகு காலத்தில் சுவாமிக்கு தாலி 9 பட்டாச்சாரியார்களுக்கு 'மெமோ'
ADDED : அக் 20, 2024 07:38 AM
ஓமலுார் : சேலம் மாவட்டம், காடையாம்பட்டி, காருவள்ளியில் உள்ள வெங்கட்ரமணர் கோவில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அக்கோவிலில் புரட்டாசி தேரோட்டத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமண சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.
கோவில் தலைமை பட்டாச்சாரியரான ராம பட்டாச்சாரியார் தலைமையில், பக்தர்கள் மத்தியில் சுவாமிக்கு கல்யாண சடங்கு துவங்கியது. நல்ல நேரமான காலை, 9:00 - 10:30 மணிக்குள், சுவாமி, தாலி கட்டும் நிகழ்ச்சி நடத்த வேண்டிய நிலையில், 11:30 மணிக்கு ராகு காலத்தில் தாலி கட்டப்பட்டது.
இந்நிகழ்வு, உள்ளூர் கேபிள், 'டிவி'யில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இது கோவில் ஆகம விதியை மீறப்பட்டதாக, பக்தர்கள் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் முக்கிய பிரமுகர்களின் வருகைக்காக தாமதம் செய்யப்பட்டதா என்ற பேச்சு எழுந்தது.
இதுகுறித்து, நேற்று, கோவில் செயல் அலுவலர் சரண்யா, பட்டாச்சாரியார்களை அழைத்து, ராகு காலத்தில் தாலி கட்டப்பட்டது குறித்து அலுவலகத்தில் நேரடி விசாரணை நடத்தினர்.
சரண்யா கூறுகையில், ''திருக்கல்யாணத்தில் நல்ல நேரம் கடந்து தாலி கட்டியது குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. நல்ல நேரத்தில் சடங்குகளை தொடங்கினால் போதும். எப்போது வேண்டுமானாலும் தாலி கட்டலாம் என, அவர்கள் பதில் அளித்தனர். இச்சர்ச்சை குறித்து, ஒன்பது பேருக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.