தங்கம் தென்னரசு கருணை காட்டணும்! சட்டசபையில் சிரிப்பலை ஏற்படுத்திய அமைச்சர் துரைமுருகன்!
தங்கம் தென்னரசு கருணை காட்டணும்! சட்டசபையில் சிரிப்பலை ஏற்படுத்திய அமைச்சர் துரைமுருகன்!
ADDED : டிச 10, 2024 11:33 AM

சென்னை: உறுப்பினர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கருணையோடு அதிக நிதியை தங்கம் தென்னரசு ஒதுக்க வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் பேசியது, சட்டசபையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரின் 2ம் நாள் கூட்டம் இன்று தொடங்கியது. கர்நாடக மாஜி முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா, மாஜி எம்.எல்.ஏ., மோகன் மறைவக்கு அவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
அந்த வகையில் எம்.எல்.ஏ., காமராஜ் பேசியதாவது; திருவாரூர் மாவட்டத்தில் காவிரி பாசன பகுதிகளில் ஆறுகளை விட பாசன வாய்க்கால்கள் மேடாகி கொண்டு இருக்கிறது. குறைவான தண்ணீர் வரும் போது வாய்க்கால்களில் நீர் பாய்வது கிடையாது. எனவே இந்த குறையை போக்க, வாய்க்கால்கள் தூர் வாரப்பட வேண்டும். இல்லை என்றால் தேவைக்கு ஏற்ப தடுப்பணைகள் தூர்வாரப்பட வேண்டும்.
அதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார். அவர் கூறியதாவது; உறுப்பினர் கேட்பதெல்லாம் டேம் அல்ல. தடுப்பணை தான். ஆனால் அதுதான் சரியாக கூட இருக்கிறது. எனவே, இதுவரை 500 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
இந்த ஆண்டு 1000 தடுப்பணைகள் கட்டினால் ஏறக்குறைய எல்லா உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். அதுதான் இன்றைக்கு நீர்வளத்துறையில் செய்ய வேண்டிய காரியமாக இருக்கிறது. காரணம் தடுப்பணைகள் கட்டுவதன் மூலம் நீர் ஆதாரம் கிடைக்கிறது.
விவசாயிகளுக்கு தேவையானது தடுப்பணைகள் தான். நிச்சயமாக உங்கள் கோரிக்கை ஏற்கப்படும். நீங்கள் குறிப்பிட்ட தூர்வாரும் பணிகளை கவனித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ., ஸ்டாலின் குமார் பேசுகையில், துறையூர் தொகுதியில் பல பகுதிகளில் புயல் காரணமாக வெள்ளநீர் புகுந்து, விளைநிலங்களும், வீடுகளும் பாதிக்கப்பட்டன.எனவே இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வாய்க்கால்களை தூர் வார வேண்டும் என்று கோரினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், உங்கள் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்ற நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தான் எனக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். நல்ல கனிவுள்ள நிதி அமைச்சர். அதை கருணையோடு கவனித்து, அதிக நிதி ஒதுக்குமாறு உங்கள் சார்பாக நான் கேட்டுக் கொள்கிறேன் என்று சொல்லி இருக்கையில் அமர்ந்தார்.
அமைச்சர் துரைமுருகனின் இந்த பதிலைக் கேட்ட சபாநாயகர் அப்பாவு, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட பல எம்.எல்.ஏ.,க்கள் சிரித்தனர்.
பாலக்கோடு எம்.எல்.ஏ.,வான முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் (அ.தி.மு.க.,) சின்னாறு அணையில் இருந்து வரும் உபரி நீர் செல்லும் கால்வாய், 420 கன அடி கொள்ளளவு கொண்டதாக உள்ளது. அதை ஆயிரம் கன அடி கொண்டதாக மாற்றி அமைக்க வேண்டும் என்றார்.
பதிலளித்த துரைமுருகன், ''சட்டமன்ற உறுப்பினர், நீண்ட நெடுங்காலம் அமைச்சராக இருந்தவர். அவரே செய்திருக்கலாம். என்னிடத்திலேயே விட்டிருக்கிறீர்கள். இருந்தாலும், முன்னாள் அமைச்சர், இந்நாள் அமைச்சரிடம் வைத்த கோரிக்கை பரிசீலிக்கப்படும்,'' என்றார்.