ADDED : ஆக 14, 2025 07:05 AM

நாமக்கல் : 'அறிவாலயத்தில் ஒலிக்கிறது அழைப்பு மணி; தடம் மாறுவாரா அ.தி.மு.க., தங்கமணி' என்ற தலைப்பில், நேற்றைய நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் தங்கமணி நமக்கு அனுப்பி இருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தொண்டையில் சிறு அறுவை சிகிச்சை செய்து மருத்துவமனையில் இருக்கும் இந்த நேரத்தில், இப்படியொரு செய்தி என்னை மேலும் ரணமாக்கி விட்டது. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, என் உறவினர் என்பதையும் தாண்டி, அவர் மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன்.
அவர், முதல்வராக வருவதை, இந்த இயக்கத்தின் உயிர் மூச்சாக கருதுகிறேன். தொடர்ந்து கட்சிப் பணியாற்றி வருகிறேன். என் உயிர் மூச்சு உள்ளவரை அ.தி.மு.க., தான். மூச்சு நின்ற பின், என் உடலில் அ.தி.மு.க., கொடி போர்த்தி தான் இருக்கும் என்பதோடு, தங்கள் நாளிதழில் வெளியாகி இருக்கும் செய்தியை முழுமையாக மறுக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.