'தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கு ராஜராஜ சோழன் பெயர் சூட்ட வேண்டும்' சென்னை ஐகோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் அரசுக்கு கோரிக்கை
'தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கு ராஜராஜ சோழன் பெயர் சூட்ட வேண்டும்' சென்னை ஐகோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் அரசுக்கு கோரிக்கை
ADDED : நவ 10, 2024 01:42 AM

தஞ்சாவூர்: உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின், 1039வது சதய விழா மங்கள இசை, திருமுறை அரங்கத்துடன் பெரியகோவிலில் நேற்று துவங்கியது.
விழாவில், சதயவிழா குழு தலைவர் செல்வம் வரவேற்றார். கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார்.
விழா துவக்க உரையாற்றிய சென்னை ஐகோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் பேசியதாவது:
தமிழ் மண்ணில் பல மன்னர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். ஆனால், சோழ வம்சத்தில் ஆட்சி புரிந்த ராஜராஜ சோழனை மட்டும் ஏன் பெருமன்னன் என அழைக்கிறோம்.
ராஜராஜ சோழன், முன்னோர்களை காட்டிலும் சிறந்த ஆட்சி நிர்வாகத்தை நடத்தியுள்ளார். தஞ்சாவூரை சுற்றிலும் மக்கள் வாழ முக்கிய தேவையான உணவு உற்பத்தியை துவக்கி, அதை பெருக்கினார்.
ராஜராஜ சோழன் காலத்தில் விவசாயம் செழித்தோங்கியது. விவசாயம் நன்றாக இருந்தாலும், தன் நாட்டில் உள்ள மக்கள் அமைதியாக வாழ வேண்டும்.
அருகில் உள்ள அரசர்களின் படையெடுப்புகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தெற்கே, குமரியில் துவங்கி, வடக்கே துங்கபத்ரா நதி வரையுள்ள அரசர்கள் மீது போர் தொடுத்து, பல பகுதிகளை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.
தன் ஆட்சி எல்லையை விரிவுபடுத்திய பின் சமயத்தையும், தமிழையும் வளர்க்கும் பணியில் ராஜராஜ சோழன் ஈடுபடத் துவங்கினார்.
அப்போது, பல்லவர்கள் காலத்தில் காஞ்சியில் கட்டிய சில கோவில்களை பார்த்துவிட்டு, அவற்றை விட சிறந்த கோவிலை நாம் கட்ட வேண்டும் எனக்கருதி, 1006-ம் ஆண்டு கட்டத் துவங்கி, 1010ம் ஆண்டு முடித்தது தான் இந்த தஞ்சாவூர் பெரிய கோவில்.
இதுபோன்று இறைவனுக்கு மிக பிரமாண்டமான கோவில்களை அமைத்தவர்கள் தான் தமிழ் மன்னர்கள். அதைத்தாண்டி தன் காதலிக்கு கட்டடம் கட்டியவர்கள் எல்லாம் மன்னர்கள் அல்ல; அப்படிப்பட்ட மன்னர்கள் தமிழ் மண்ணில் இல்லை.
ராஜராஜ சோழனின் புகழ், இந்த உலகம் அழியும் வரை நிலைத்து நிற்கும். அப்படிப்பட்ட ராஜராஜன் என்ற பெரு மன்னனுக்கு, தமிழக அரசு இன்று அரசு விழா நடத்துவதுடன், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கு ராஜராஜன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் என பெயர் சூட்ட வேண்டும். இது ராஜராஜ சோழனுக்கு செய்யும் சிறப்பாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.