ரயில் விபத்தில் 12 பேர் பலியான வழக்கு டிரைவருக்கு விதித்த 10 ஆண்டு சிறை ரத்து
ரயில் விபத்தில் 12 பேர் பலியான வழக்கு டிரைவருக்கு விதித்த 10 ஆண்டு சிறை ரத்து
ADDED : ஜன 07, 2024 01:50 AM
சென்னை:வேலுார் அருகே நடந்த ரயில் விபத்தில், 12 பேர் பலியான சம்பவத்தில், டிரைவருக்கு விதித்த, 10 ஆண்டு சிறை தண்டனையை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து வேலுார் நோக்கி சென்ற ரயில், மேல்பாக்கம் ரயில் நிலையம் அருகே, காட்பாடி நோக்கி சென்ற பயணியர் ரயிலின் பின்புறம் மோதியது. இதில், 12 பேர் பலியாகினர்; 71 பேர் காயம் அடைந்தனர்.
கடந்த 2011 செப்டம்பரில் சம்பவம் நடந்தது. கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து சென்ற ரயில் டிரைவர் ராஜ்குமாருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
நண்பருடன் மொபைல் போனில் பேசியபடி ரயிலை இயக்கியதாகவும், வேக கட்டுப்பாட்டை மீறி அதிவேகத்தில் இயக்கியதாகவும், சிக்னலை மீறியதாகவும், ரயில்வேக்கு 2.20 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், ராஜ்குமாருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது.
வழக்கை விசாரித்த வேலுார் நீதிமன்றம், ராஜ்குமாருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் ராஜ்குமார் மேல்முறையீடு செய்தார்.
அவர் சார்பில், வழக்கறிஞர் ஏ.நாகராஜன் ஆஜராகி, ''குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. முதல் தகவல் அறிக்கையில், குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் என குறிப்பிடப்பட்ட பகுதியில், 'ரயில் டிரைவர்' என்று கூறப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்து ஐந்து நாட்களுக்கு பின், முதல் தகவல் அறிக்கை, நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. புலன் விசாரணை முறையாக நடக்கவில்லை,'' என்றார்.
மனுவை விசாரித்த, நீதிபதி சுந்தர் மோகன் பிறப்பித்த உத்தரவு:
வழக்கை நிரூபிக்க, வேகம் காட்டும் கருவி உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை, புலனாய்வு அதிகாரி சேகரிக்கவில்லை.
வாய்மொழி சாட்சியத்தை நம்பி உள்ளனர். 90 கி.மீ., வேகத்தில் ரயில் சென்றதாக, எந்த ஆவணமும் இல்லாமல், ஒரு சாட்சியால் எப்படி கூற முடியும்? சிக்னல்களின் நிலையை தெரிவிக்கும், 'டேட்டா லாக்கர்' தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, சிக்னல்கள் இயங்கவில்லை என்ற எதிர் தரப்பு வாதத்தை, முழுமையாக ஒதுக்கி விட முடியாது.
டிரைவர் தவறு செய்துள்ளார் என்ற அடிப்படையிலேயே புலன் விசாரணை நடந்துள்ளது. எனவே, ராஜ்குமாரை குற்றவாளி என தீர்மானித்து, வேலுார் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.