ஆசிரியர்களுடன் அதிகாரிகள் பேச்சு 18 நாள் தொடர் போராட்டம் வாபஸ்
ஆசிரியர்களுடன் அதிகாரிகள் பேச்சு 18 நாள் தொடர் போராட்டம் வாபஸ்
ADDED : மார் 08, 2024 10:40 PM

சென்னை:சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு, 18 நாட்களாக நடந்த ஆசிரியர்கள் போராட்டம், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய சமரச பேச்சுக்குப் பின், தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
அரசு பள்ளிகளில், 2009 ஜூன் 1க்கு முன் நியமிக்கப்பட்டவர்களுக்கு உள்ளதுபோல், அதன்பின் நியமிக்கப்பட்டவர்களுக்கும், அடிப்படை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம், தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.
இந்த சங்கம் சார்பில், கடந்த மாதம், 19ம் தேதி முதல், சென்னை மற்றும் பல்வேறு மாவட்ட தலைநகரங்களில், முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. தினமும் நடந்த இந்த போராட்டத்தில், நுாற்றுக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்று, தினமும் கைதாகினர்.
தேர்வு மற்றும் கல்வி ஆண்டின் இறுதிக் காலம் என்பதால், போராட்டத்தைக் கைவிட்டு, பணிக்கு திரும்புமாறு, ஆசிரியர் சங்கத்துக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், ஆசிரியர்கள் நேற்று முன்தினம் வரை, 18வது நாளாக தொடர்ந்து போராட்டத்தை நடத்தினர்.
இந்நிலையில், பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி தலைமையில், தொடக்கக் கல்வி இயக்குனர் கண்ணப்பன், பணியாளர் பிரிவு இணை இயக்குனர் ராஜேந்திரன் ஆகியோர் கொண்ட குழு, இடைநிலை ஆசிரியர்கள் இயக்க பொதுச்செயலர் ராபர்ட் தலைமையிலான நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினர்.
டி.பி.ஐ., வளாகத்தில் நடந்த பேச்சில், தேர்வு, தேர்தல், அரசு பள்ளி மாணவர் சேர்க்கை ஆகிய நடவடிக்கைகளை கருத்தில் வைத்து, போராட்டத்தை தள்ளி வைக்க, அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், தங்கள் சொந்த ஊருக்கு நேற்று புறப்பட்டனர். டி.பி.ஐ., வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பும் விலக்கப்பட்டது.