2ம் கட்ட அத்திக்கடவு - அவிநாசி திட்டம் ஆரம்பத்திலேயே நிதித்துறை முட்டுக்கட்டை
2ம் கட்ட அத்திக்கடவு - அவிநாசி திட்டம் ஆரம்பத்திலேயே நிதித்துறை முட்டுக்கட்டை
ADDED : ஜன 30, 2025 06:02 AM

அத்திக்கடவு - அவிநாசி இரண்டாம் கட்ட நீரேற்று திட்டத்திற்கு, நிதி ஒப்புதல் வழங்க, நிதித்துறை மறுத்து விட்டதால், நீர்வளத் துறையினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள வறட்சியான பகுதிகளுக்கு, நீர் எடுத்து செல்லும் வகையில், அத்திக்கடவு - அவிநாசி நீரேற்று திட்டத்தை, நீர்வளத்துறை செயல்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஈரோடு காளிங்கராயன் அணையில் இருந்து, காவிரி உபரிநீரை பம்பிங் செய்து, குழாய்கள் வாயிலாக, இம்மாவட்டங்களில் உள்ள 1,045 குளம், குட்டைகளில் நிரப்ப, பணிகள் நடந்து வருகின்றன.
இதுவரை 1,030 குளங்கள் நிரம்பியுள்ளன. எஞ்சிய குளங்களில் நீரை நிரப்புவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இத்திட்டத்திற்கு, 1,916 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.
இதேபோல, மூன்று மாவட்டங்களில் எஞ்சியுள்ள வறட்சியான குளங்களுக்கு, நீர் எடுத்து செல்லும் வகையில், அத்திக்கடவு - அவிநாசி இரண்டாம் கட்ட திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்திக்கடவு - அவிநாசி இரண்டாம் கட்ட திட்டத்திற்கு, 2,000 கோடி ரூபாய் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, 600 முதல் 1,050 ஏரிகள் வரை, நீரை நிரப்ப முடியும். இத்திட்டத்திற்கு சாத்தியகூறு அறிக்கை தயாரிக்க, நீர்வளத்துறை வாயிலாக முயற்சிக்கப்பட்டது.
ஆனால், திட்டம் பரிசீலனையில் உள்ளதாக கூறி, நிதி வழங்க ஆரம்பத்திலேயே நிதித்துறை முட்டுக்கட்டை போட்டுள்ளது. இதனால், நீர்வளத்துறையினர் மட்டுமின்றி, மூன்று மாவட்ட மக்கள், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், இப்பிரச்னை எதிரொலிக்கும் என்பதால், நீர்வளத்துறையினர் அடக்கி வாசித்து வருகின்றனர்.
- நமது நிருபர் -

