sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கொங்கு மண்டல மக்களின் 60 ஆண்டு கனவு ...பலித்தது! அத்திக்கடவு -அவிநாசி திட்டம் நிறைவேறியது

/

கொங்கு மண்டல மக்களின் 60 ஆண்டு கனவு ...பலித்தது! அத்திக்கடவு -அவிநாசி திட்டம் நிறைவேறியது

கொங்கு மண்டல மக்களின் 60 ஆண்டு கனவு ...பலித்தது! அத்திக்கடவு -அவிநாசி திட்டம் நிறைவேறியது

கொங்கு மண்டல மக்களின் 60 ஆண்டு கனவு ...பலித்தது! அத்திக்கடவு -அவிநாசி திட்டம் நிறைவேறியது

2


ADDED : ஆக 18, 2024 01:19 AM

Google News

ADDED : ஆக 18, 2024 01:19 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தின் விவசாயத்துக்கான முதல் நீரேற்று திட்டமான அத்திக்கடவு - அவிநாசி திட்டம் முழுமையாக முடிக்கப்பட்டு, முதல்வரால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

கொங்கு மண்டலத்தின் வறண்ட பகுதிகளில் விவசாயம் செழிக்க, அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தை செயல்படுத்த, அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரி வந்தனர். கடந்த, 1957ல், இத்திட்டத்தை நிறைவேற்ற சட்டசபையில் எம்.எல்.ஏ., மாரப்பக்கவுண்டர் கோரிக்கை வைத்தார். அதிலிருந்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

மேட்டுப்பகுதி


மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீரை ஆதாரமாக கொண்டுள்ள பவானி ஆற்று நீர் சார்ந்து, ஏராளமான குடிநீர் மற்றும் பாசன திட்டங்கள் உள்ளன. கொடிவேரி பாசன திட்டத்தில், 24,504 ஏக்கர்; காலிங்கராயன் பாசன திட்டத்தில், 15,743 ஏக்கர்; கீழ் பவானி பாசன திட்டத்தில், 2.07 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இதில், நொய்யல் - பவானி இடையே கோவை மாவட்டம், காரமடை துவங்கி ஈரோடு மாவட்டம், நம்பியூர், பெருந்துறை வரையிலான மேட்டுப்பகுதி மழை மறைவு பிரதேசமாக இருந்தன. இங்கு விவசாயத்துடன், தொழிற்சாலைகளும் பெருகின. தேவைக்கேற்ப நீர் இல்லை. மழையளவும் குறைவாக இருக்கும். பெரும்பாலும் மானாவாரி சாகுபடியே நடக்கிறது.

மழையின்மையால், காரமடை, அன்னுார், நம்பியூர், பெருந்துறை உள்ளிட்ட இடங்களில், நிலத்தடி நீர்மட்டம், 1,600 அடிக்கும் கீழ் சென்றது. வறட்சியால் பலர் கோவை, மைசூரு போன்ற நகரங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.

கட்சிகள் பெரிதாக ஆர்வம் காட்டாததால், ஆர்வலர்கள் களமிறங்கி, விவசாயிகளையும் பொதுமக்களையும் திரட்டி வீதிக்கு அழைத்து வந்தனர். கோவையில் இருந்து பிரிக்கப்பட்ட புதிய மாவட்டங்கள் உருவான பின் போராட்டம் வலுப்பெற்றது.

திரும்பி பார்த்தன


கடந்த, 2001 சட்டசபை தேர்தலில், அத்திக்கடவு போராட்டக் குழு சார்பில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர், 33,000 ஓட்டுகள் பெற்று, இரண்டாமிடம் பிடித்ததும் கட்சிகள் திரும்பிப் பார்த்தன.

கிராமங்கள் தோறும், 'அத்திக்கடவு போராட்டக்குழு' என்ற பெயர் பலகை திறக்கப்பட்டது. 'நீர் தேடி போவோம்; இல்லையேல் வேறு ஊர் தேடி போவோம்' என்ற கோஷத்துடன் போராட்டம் தொடர்ந்தது.

அதன் விளைவாக, 2019ல் அ.தி.மு.க., ஆட்சியில் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் விறுவிறுப்பாக நடந்தன. முக்கால்வாசி பணிகள் முடிந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் 1,916.41 கோடி ரூபாய் ஒதுக்கி பணிகளை துரிதப்படுத்தினார். அவை முடிந்த நிலையில், சோதனை ஓட்ட பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன.

நேற்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

நிரப்பப்படும்


இனி, பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்ப்புறத்தில் இருந்து, ஆண்டுக்கு, 1.50 டி.எம்.சி., உபரி நீர், வினாடிக்கு, 250 கன அடி வீதம், 70 நாட்களுக்கு நீரேற்று முறையில், 1,065 கி.மீ., நீளத்திற்கு நிலத்தடியில் குழாய் வழியாக, ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு எடுத்து செல்லப்படும்.

அங்கு வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், 24,468 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில், 1,045 ஏரிகள், குளம், குட்டைகளில் நீர் நிரப்பப்படும்.

துவக்க நிகழ்ச்சியில் நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் கயல்விழி, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, நீர்வள துறை செயலர் மணிவாசன், முதன்மை தலைமை பொறியாளர் மன்மதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காளிங்கராயன்பாளையம் அணைக்கட்டில் நடந்த துவக்க விழாவில் அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், கலெக்டர்கள் ஈரோடு ராஜகோபால் சுன்கரா, திருப்பூர் கிறிஸ்துராஜ், கோவை கிராந்திகுமார் பேடி, ஈரோடு எம்.பி., பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மூன்று மாவட்ட மக்களின் 60 ஆண்டுகால கனவு பலித்துள்லதால், போராட்ட குழுவினர் பெருமகிழ்ச்சியில் உள்ளனர்.

இணைக்க வேண்டும்

@
அத்திக்கடவு-அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம் அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. தி.மு.க., அரசு பணியை நிறைவு செய்து துவக்கி வைத்திருக்கிறது. இதன் வாயிலாக வானம் பார்த்த பூமிகள் செழிக்கும். இத்திட்டத்தில் அடுத்தபடியாக விடுபட்ட குளம், குட்டைகளை இணைக்க வேண்டும்.



தனபால் அவிநாசி எம்.எல்.ஏ

திட்டம் -2 வரைவு


இத்திட்டத்தை 2020ல் துவங்கிய அ.தி.மு.க.,வுக்கு நன்றி. திட்டம் கொண்டு வர போராடி, உயிரிழந்தவர்களுக்கு இத்திட்டம் சமர்ப்பணம். நாங்கள் 15 ஆண்டுகளாக போராடி வந்தோம். திட்டத்தில் விடுபட்ட பகுதிகளை இணைத்து, 'திட்டம்-2'க்கான வரைவை முதல்வரிடம் வழங்கியுள்ளோம். அதை நிறைவேற்றும்போது முழுமையான பலன் கிடைக்கும்.


ஈஸ்வரன்கொ.ம.தே., கட்சி



பாண்டியாறு புன்னம்புழா திட்டம் காலத்தின் கட்டாயம்


தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலர் நல்லசாமி கூறியதாவது:இத்திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு, 70 நாட்கள் தவிர, மற்ற நாட்களில், அனைத்து உபகரணங்களும் பயன்பாடின்றி இருக்கும். ஆண்டு முழுக்க இத்திட்டத்தை செயல்படுத்த, கேரள அரசுடன் பேசி, பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.நீலகிரி மாவட்டம், கூடலுார் அருகே உருவாகும் பாண்டியாறு, கேரளாவின் சாலியாற்றில் கலந்து, நிலம்பூர், கள்ளிக்கோட்டை வழியாக கடலில் கலக்கிறது. இதன் வாயிலாக ஆண்டுக்கு, 14 டி.எம்.சி., நீர் கிடைக்கும். நீர் உற்பத்தியாகும் இடத்தில் சிறிய சுரங்கம் அமைத்து, தடுப்பணை கட்டினால், அந்நீரை, நீலகிரி மாவட்டம், மாயாற்றுக்கு திருப்ப முடியும். பெரியளவில் செலவிட அவசியம் இல்லை. கேரளாவில் ஆண்டு சராசரி மழையளவு, 300 செ.மீ., தமிழகத்தின் மழையளவு சராசரியாக ஆண்டுக்கு, 92 செ.மீ., எனவே, பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்றினால், தமிழகத்தின் நீர்த்தேவை பெருமளவு பூர்த்தியாகும். இதன் வாயிலாக, 14 டி.எம்.சி., நீர் கூடுதலாக கிடைக்கும் பட்சத்தில், அத்திக்கடவு திட்டத்துக்கு, 1.50 டி.எம்.சி., தண்ணீர் போக, எஞ்சிய தண்ணீரை வைத்து, திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு கூடுதலாக குடிநீர் தேவையை தீர்க்க முடியும். பவானிசாகர் அணை சார்ந்த பாசன பற்றாக்குறையும் தவிர்க்கப்படும்.அங்கிருந்து காவிரியில் வடிந்து, டெல்டா மாவட்ட பாசனத்துக்கும் பயன்படுத்த முடியும். ஒரு பகுதி நீரை வீராணம் ஏரிக்கு கொண்டு சென்று, சென்னை மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும்.



நீலகிரி மழையே பிரதானம்


துவக்கத்தில், பில்லுார் அணையில் இருந்து, 4 கி.மீ., நீளத்துக்கு சுரங்கம் தோண்டி, 100 கி.மீ. நீளத்துக்கு திறந்தவெளி கால்வாய் அமைத்து, அதன் வழியாக, பெருந்துறை வரை, 538 குளம், குட்டைகளில் நீர் நிரப்ப திட்டமிடப்பட்டது. இது, மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்த பகுதி என்பதால், சுரங்கம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்காது. அத்துடன், பவானி அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை மட்டும் தான் எடுக்க வேண்டும் என, நிர்பந்தம் இருந்தது.பில்லுார், பவானி அணைகள் ஒரே நேரத்தில் நிரம்பினால் தான் உபரி நீர் வெளியேறும் என்ற நிலையில், இது 5 -- 8 ஆண்டு இடைவெளியில் தான் அவ்வாறு கிடைக்கும் என, நீர்வள ஆதார அமைப்பினர் கணித்தனர். மேலும், பவானியில் இருந்து வெளியேறும் நீரை நேரடியாக எடுத்தால், அந்த அணை சார்ந்துள்ள, கீழ் பவானி, கொடிவேரி, காலிங்கராயன் பாசன விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற புகார் எழுந்தது. இதுபோன்ற காரணங்களால் அத்திட்டம் கைவிடப்பட்டது.மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து, காலிங்கராயன் அணைக்கட்டு தாண்டி வெளியேறும் உபரி நீர் காவிரியில் கலக்கிறது. அவ்வாறு, வெளியேறும் உபரிநீர் காவிரியில் டெல்டா விவசாயிகளின் பாசனத்துக்கு பயன்படுகிறது என்ற நிலையில், அதற்கும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது என, உபரி நீரில், ஆண்டுக்கு, 1.5 டி.எம்.சி., மட்டுமே எடுக்க முடிவானது.காலிங்கராயன் அணைக்கட்டுக்கு கீழ், ஒரு மீட்டர் உயரத்தில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. அதில் தேங்கும் உபரி நீர், முதல் நீரேற்று நிலையத்துக்கு 'பம்பிங்' செய்யப்படும். அங்கிருந்து, பிற ஐந்து நீரேற்று நிலையங்களுக்கும், 'பம்பிங்' செய்யப்படும். ஆறு நீரேற்று நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள நீர்தேக்க தொட்டியில் அந்த தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட குளம், குட்டைகளுக்கு 'சென்சார்' முறையில் திறந்து விடப்படும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.மொத்தம், 1,916 கோடி ரூபாய் மதிப்பில் முழுமை பெற்றுள்ள இத்திட்டம், நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழை மற்றும் பெருக்கெடுத்து பவானி ஆற்றுக்கு வரும் மழை நீரை நம்பியே உள்ளது.



- நமது நிருபர் குழு -






      Dinamalar
      Follow us