திருவாரூர் கட்டளைகள் விவகாரம் மடாதிபதி பதில் அளிக்க உத்தரவு
திருவாரூர் கட்டளைகள் விவகாரம் மடாதிபதி பதில் அளிக்க உத்தரவு
ADDED : மே 29, 2025 11:40 PM
சென்னை:திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் கட்டளைகளுக்கு சொந்தமான சொத்துக்களை, முறையாக நிர்வகிக்காதது குறித்து விளக்கம் கேட்டு, வேளக்குறிச்சி மடாதிபதிக்கு அறநிலையத்துறை அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
திருவாரூரில் உள்ள தியாகராஜ சுவாமி கோவில் பழமையானது. இக்கோவில் பெயரில், நேரடியாக பதிவு செய்யப்பட்ட சொத்துக்கள் எதுவும் இல்லாததால், பணிகளை மேற்கொள்ள, 13 கட்டளைகள் செயல்பட்டு வருகின்றன.
பரம்பரை அறங்காவலர்
இதில், அபிஷேக கட்டளை, அன்னதான கட்டளைக்கு, வேளக்குறிச்சி மடாதிபதி சத்திய ஞான மகாதேவர் தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், தற்போது பரம்பரை அறங்காவலராக இருந்து வருகிறார்.
இந்த இரு கட்டளைகளுக்கும் சொந்தமாக, 1937ம் ஆண்டு, 3,900 ஏக்கர் நிலங்கள் இருந்த நிலையில், தற்போது, 1,300 ஏக்கர் நிலங்கள் மட்டுமே உள்ளன. கட்டளைகளுக்கு சொந்தமான நிலங்களை முறையாக பராமரிக்கவில்லை.
எனவே, உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என, 2010 ஜனவரி, 12ல், வேளக்குறிச்சி மடாதிபதிக்கு, ஹிந்து அறநிலையத்துறை, 'நோட்டீஸ்' அனுப்பியது.
இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி, வேளக்குறிச்சி மடாதிபதி தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில், 2002ல் வழக்கு தொடரப்பட்டது; 23 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கை நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி விசாரித்தார்.
அறநிலையத்துறை தரப்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன், தியாகராஜ சுவாமி கோவில் செயல் அலுவலர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.கே.ஸ்ரீராம் ஆஜராகினர்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசில், எந்த காரணங்களும் குறிப்பிடப்படவில்லை என்கிற மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
தள்ளுபடி
எனவே, மனுதாரர் முந்தைய விளக்கங்களுடன் சேர்த்து, புதிய விளக்கத்தை சமர்ப்பித்தால், ஹிந்து அறநிலையத்துறை அவற்றை சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலித்து, இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும்.
அவர்கள் தரப்பு வாதங்களை முன் வைக்க, அவகாசமும் வழங்க வேண்டும். மனுதாரர், ஹிந்து அறநிலையத்துறை நோட்டீசுக்கு, நான்கு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும்.
அறநிலையத்துறை சட்டப்பிரிவு 71 மற்றும் 72ன் கீழ், குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் கேட்கும் அறிவிப்பை வெளியிட அதிகார வரம்பு அடிப்படையை கொண்டு உள்ளதால், மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.