குற்றங்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவதே சாதனை: முதல்வர்
குற்றங்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவதே சாதனை: முதல்வர்
ADDED : நவ 28, 2024 01:36 AM

சென்னை:''குற்றங்கள் குறைந்து விட்டதாக சொல்வது சாதனை அல்ல; குற்றங்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவதுதான் சாதனை,'' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு, புதிதாக இரண்டாம் நிலை காவலர்களாக, 3,359 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது.
பணி நியமன ஆணைகளை வழங்கி, முதல்வர் பேசியதாவது:
போலீஸ் ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன், அதற்காக படித்து, கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு, தேர்வுகள் எழுதி, அதில் வெற்றி பெற்று, பல லட்சம் பேரில் நீங்கள், 3,359 பேர் தேர்வாகி வந்திருக்கிறீர்கள்.
உங்களுக்கு ஏராளமான கடமைகள் காத்திருக்கின்றன. சட்டம் - ஒழுங்கு பாதுகாப்புடன், குற்றங்களே நடக்காமல் தடுப்பது தான், இலக்காக இருக்க வேண்டும்.
நம் முன்னால், சைபர் குற்றங்கள், போதை ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் சவாலாக உள்ளன. அவற்றை எதிர்கொள்ள உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
குற்றங்கள் குறைந்து விட்டதாக சொல்வது சாதனை அல்ல; குற்றங்களே இல்லை என்று சொல்வது தான் சாதனை.
இன்றைக்கு பணியில் சேரும் உங்களுக்கு, இதே மிடுக்கும், போலீஸ் என்ற கம்பீரமும் உங்கள் ஓய்வு காலம் வரை இருக்க வேண்டும். உங்கள் பெயரை சொன்னாலே தமிழ்நாடே பெருமைப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தலைமை செயலர் முருகானந்தம், உள்துறை செயலர் தீரஜ்குமார், டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.