அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகத்தை மாற்றியதே சாதனை * தி.மு.க., மீது பழனிசாமி குற்றச்சாட்டு
அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகத்தை மாற்றியதே சாதனை * தி.மு.க., மீது பழனிசாமி குற்றச்சாட்டு
ADDED : ஜன 21, 2025 06:26 PM
சென்னை:'அதிக கடன் வாங்கிய மாநிலமாக, தமிழகத்தை மாற்றியதே தி.மு.க., அரசின் சாதனை' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
இந்தியாவிலேயே கடன் வாங்குவதில், முதன்மை மாநிலமாக தமிழகத்தை, தி.மு.க., அரசு மாற்றியுள்ளது. இதை சுட்டிக்காட்டினால், எனக்கு பொருளாதார நிதி மேலாண்மை குறித்து, அடிப்படை புரிதல் இல்லை என்று, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
அ.தி.மு.க., ஆட்சியில் வாங்கிய கடன், மாநில உற்பத்தி மதிப்பில், 25 சதவீதத்திற்குள்தான் இருந்தது. இப்போது, தி.மு.க., அரசில் கடன் சதவீதம் 26 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. இதை சொன்னால், எங்களுக்கு அடிப்படை புரிதல் இல்லை என்பதா?
அ.தி.மு.க., ஆட்சியில், 2018- - 19 வரை வருவாய் பற்றாக்குறை குறைவாகவே இருந்தது. 2020 - -21ல் கொரோனாவால் அதிக செலவு ஏற்பட்டதால்தான் வருவாய் பற்றாக்குறை அதிகமானது. ஆனால், இப்போது தி.மு.க., ஆட்சியில் ஆண்டுதோறும் வருவாய் பற்றாக்குறை உயர்ந்து வருகிறது. 2024- - 25ல் வருவாய் பற்றாக்குறை, 49,279 கோடி ரூபாயாக உள்ளது.
தி.மு.க., ஆட்சியின் ஐந்தாவது ஆண்டில், மொத்த கடன்களின் அளவு 5 லட்சம் கோடி ரூபாயை தாண்டும். இதில் 50 சதவீதம் கூட மூலதன செலவிற்கு செலவிடப்படவில்லை. கடனில் பெரும் பகுதி, வருவாய் செலவுக்கு தான் செலவிடப்படுகிறது. இதுதான் நிதி மேலாண்மையா?
அ.தி.மு.க., ஆட்சியில், மத்திய நிதி குழு மற்றும் மத்திய அரசு அனுமதித்த அளவை விட, மிக குறைவாகவே கடன் பெற்றோம். தற்போதுள்ள தி.மு.க., அரசைபோல், கடன் வாங்கியதில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் என்ற பெருமையை, நாங்கள் பெறவில்லை.
அ.தி.மு.க., ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட, சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்திற்கு செலவழிக்கும் 26,000 கோடி ரூபாயை, அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த தொகைகளை கூட்டினால் கூட, இந்த ஆட்சியில் மூலதனச் செலவு உயரவில்லை. அப்படியானால், பல திட்டங்கள் நிதி பற்றாக்குறையால் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த அரசு வாங்கும் கடன், வருவாய் செலவினங்களுக்கே செலவிடப்படுகிறது என்பதைத் தானே இது காட்டுகிறது.
'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தின் நிதி மேலாண்மையை மேம்படுத்துவோம்' என்று, மக்களை ஏமாற்றி, இதற்காக ஒரு உபயோகமற்ற சர்வதேச நிபுணர் குழுவையும் அமைத்து, நிதி, வருவாய் பற்றாக்குறை, கடன் அளவு என, எல்லா நிதி குறியீடுகளிலும் பின்னடைவை சந்தித்ததுதான் தி.மு.க., அரசின் சாதனை.
ஓட்டுகளை பெறுவதற்காக மட்டும் திட்டங்களை போடாமல், தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களையும் தீட்டி, அவைகளை செயல்படுத்த, நல்ல நிதி மேலாண்மையில் நிதியமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். அதை விடுத்து, நிதி மேலாண்மை குறித்து, எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.