ADDED : அக் 16, 2024 09:25 PM
பொது மக்கள் மற்றும் ரசிகர்களின் தர்மயுத்தத்திற்கு மதிப்பளித்து, உலகிலேயே ஓர் அரசியல் கட்சி தோற்றுவிக்கப்பட்டது என்றால், அது எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க., மட்டுமே.
கட்சியை விட்டு எம்.ஜி.ஆர்., நீக்கப்பட்ட அநீதியை எதிர்த்து, மக்கள் கொந்தளித்தனர்.
தர்மயுத்தம் நடத்திய மக்களின் அன்பும் நெருக்கடியுமே, 1972ம் ஆண்டு, அக்., 17ம் தேதி அ.தி.மு.க.,வை, எம்.ஜி.ஆர்., துவக்க காரணமாக அமைந்தது.
அதைத் தொடர்ந்து நடந்த சில முக்கியமான வரலாற்று சம்பவங்களை, இன்றைய தலைமுறையினருக்காக பகிர்ந்து கொள்கிறேன்.
ஆறு மாதக் குழந்தையாக கட்சி இருந்தபோது, திண்டுக்கல் லோக்சபா இடைத்தேர்தலில், மாபெரும் வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர்., மக்களால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர், அடுத்த முதல்வர் என, பத்திரிகைகளால் கணிக்கப்பட்டார். கோவை லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி கிடைத்தது
புதுச்சேரி மாநில சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது
வத்தலகுண்டு ஆறுமுகம், பூலாவாரி சுகுமார், கண்ணிழந்த கர்ணன், விஷமருந்தி உயிரிழந்த இஸ்மாயில் போன்ற ஆயிரக்கணக்கான ரசிகர்களின் தியாகத்தால், தொடர் வெற்றி கிடைத்தது
கடந்த, 1977ம் ஆண்டு 142; 1980ம் ஆண்டு 162; 1984ம் ஆண்டு 195 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது.
ஜாதி, மதம் பார்க்காமல், எம்.ஜி.ஆர்., வேட்பாளர் என்ற ஒரு தகுதிக்காவே, 1987ம் ஆண்டு வரை மக்கள் ஓட்டளித்து, அ.தி.மு.க., வேட்பாளர்களை வெற்றி பெற வைத்தனர்.
இன்று 53வது ஆண்டில் அ.தி.மு.க., அடியெடுத்து வைக்கிறது. இந்நாளில் நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும் அடைகிறேன்.
சைதை துரைசாமி
சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர்.

