போராட போகிறோம் என சட்டசபைக்கு வந்த அ.தி.மு.க, பம்மியது
போராட போகிறோம் என சட்டசபைக்கு வந்த அ.தி.மு.க, பம்மியது
ADDED : அக் 16, 2025 11:32 PM

சென்னை, அக். 17- கிட்னி திருட்டு தொடர்பாக போராடப் போகிறோம் எனக்கூறி, 'கிட்னி ஜாக்கிரதை' என்ற வாசகம் அச்சிடப்பட்ட பேட்ஜ்களை, சட்டையில் அணிந்து வந்த அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், அவற்றை எடுத்து தங்கள் சட்டை பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு, சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில், ஏழை மக்களின் வறுமையை பயன்படுத்தி கிட்னி திருடப்பட்டது. கிட்னிக்கு சில லட்சம் ரூபாயை கொடுத்து விட்டு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வாயிலாக, பல கோடி ரூபாய் சம்பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை அதிகாரிகள், ஊழியர்கள், ஏஜன்ட்களுக்கு தொடர்பு உள்ளதாகவும், தனியார் மருத்துவமனைகளை நடத்தும் அரசியல்வாதிகளும், இதன் பின்புலத்தில் உள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்களிடம் நடத்தப்பட்ட கிட்னி திருட்டு வெளிச்சத்திற்கு வந்ததால், திருச்சி மற்றும் பெரம்பலுார் மாவட்டங்களில், இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம், தமிழகத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சட்டசபை கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், இந்த பிரச்னையை எழுப்ப, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., முடிவு செய்தது.
இதற்காக, அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், தங்களது சட்டை பையின் மீது அணிந்து கொள்ளும் வகையில், 'கிட்னி ஜாக்கிரதை' என்ற வாசகம் அச்சிடப்பட்ட, 'பேட்ஜ்' தயாரிக்கப்பட்டது. அதில், ஒரு பக்கத்தில் கிட்னி படமும் இடம் பெற்றிருந்தது.
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும் அந்த பேட்ஜ்கள் வழங்கப்பட்டன. ஆனால், பேட்ஜை சட்டைக்கு மேல் குத்திக் கொள்ளாமல், சட்டை பாக்கெட்டில் வைத்தபடி, சபைக்குள் அ.தி.மு.க.,வினர் சென்றனர்.
இப்பிரச்னை தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி உட்பட பல்வேறு கட்சி எம்.எல்.ஏ.,க்கள், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த விவாதத்தில் பங்கெடுத்து
பேசுவதற்கு பழனிசாமி, பா.ம.க., - அருள் ஆகியோருக்கு மட்டுமே, சபாநாயகர் அப்பாவு அனுமதி வழங்கினார்.
பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். இந்த விளக்கத்தை ஏற்று, அ.தி.மு.க.,வினர் அமைதி காத்தனர். பெரும் புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட சம்பவம் சுமுகமாக முடிந்ததால், ஆளும் கட்சியினர் ஆறுதல் அடைந்தனர்.
இந்த சம்பவத்தில், அ.தி.மு.க.,வினர் பம்மியதால், நாமக்கல், சேலம் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அரசியல் செய்ய முடியாமல், அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
கிட்னி திருட்டு கடந்த ஆட்சியிலும் உண்டு! சட்டசபையில் நேற்று, கிட்னி திருட்டு குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்: * எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி, கிட்னி முறைகேடு நடந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த, சுகாதார திட்ட இயக்குனர் வினீத் தலைமையில் ஒரு குழுவை அரசு அமைத்துள்ளது.
இந்த குழு, பெரம்பலுார் மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனையிலும், ஈரோடு மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனையிலும், கிட்னி முறைகேடு நடந்ததை உறுதி செய்துள்ளது. பள்ளிப்பாளையத்தில் பேபி என்ற பெண்ணுக்கு தெரியாமலேயே, அவரிடம் இருந்து கிட்னிக்கு பதிலாக, கல்லீரல் திருடப்பட்டு உள்ளது. விசைத்தறி தொழிலாளர்களின் கிட்னியை திருடியவர்கள் மீதும், தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் மீதும், சான்றிதழ் அளித்த அதிகாரிகள் மீதும், அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அந்த வழக்கில், முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கண்டறிய சிறப்பு புலனாய்வு குழு நியமிக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நியமித்த சிறப்பு புலனாய்வு குழு உடனடியாக விசாரணை நடத்த, அனைத்து உதவிகளையும், அரசு செய்ய வேண்டும்.
* பா.ம.க., - அருள்: சேலம் மாவட்டத்திலும் கிட்னி முறைகேடு நடந்துள்ளது. ஏழை மக்களை ஏமாற்றி அழைத்து சென்ற புரோக்கர்கள், இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். ஐந்து லட்சம் ரூபாய், ஏழு லட்சம் ரூபாய்க்கு கிட்னி விற்கப்பட்டு உள்ளது. பணத்துக்காக, குடும்ப சூழல் கருதி, இதுபோன்று சிலர் ஏமாந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்டால், கிட்னியை விற்கவில்லை என்றால், கடன் தொல்லையில் தற்கொலை செய்ய வேண்டிய நிலை வந்திருக்கும் என்கின்றனர். கிட்னி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது, தயவு தாட்சன்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* அமைச்சர் சுப்பிரமணியன்: கிட்னி முறைகேடு தொடர்பான விசாரணை அடிப்படையில், திருச்சி சிதார் மருத்துவமனை மற்றும் பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லுாரி மருத்துமனைகளுக்கு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. கிட்னி முறைகேட்டில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட இடைத்தரகர்கள் ஸ்டான்லி மோகன் மற்றும் ஆனந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாரபட்சம் எதுவுமில்லாமல், எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல், இந்த மருத்துவமனைகளின் அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. கிட்னியை ஐந்து லட்சம் ரூபாய், 10 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இதுபோன்ற செயல்கள் இப்போது மட்டுமல்ல; கடந்த காலங்களிலும் நடந்துள்ளன. அப்போதிருந்த அரசு, இது தொடர்பாக புதிய விதிமுறைகளையோ, சட்டப்பூர்வ நடவடிக்கைகளையோ எடுக்காமல் இருந்தது.
கடந்த, 2017ம் ஆண்டு, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், இதுபோன்ற செயல்கள் நடப்பதாக மருத்துவ துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில் சரிபார்க்காமல் ஒப்புதல் அளித்த, ஏழு அதிகாரிகள் மீது, துறை ரீதியான நடடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, அரசு முயற்சிகளை மேற்கெண்டு வருகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.