ADDED : ஜன 10, 2025 11:39 PM
சென்னை:மூன்று நாட்களுக்கு பின், சட்டசபைக்கு வெள்ளை வேட்டி, சட்டையுடன் அ.தி.மு.க.,வினர் வந்தனர்.
சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்து வருகிறது.
அண்ணா பல்கலை மாணவி பாலியல் துன்புறுத்தல் சம்பவத்திற்கு நீதி கேட்டு, கடந்த மூன்று நாட்களாக வெள்ளை வேட்டி, கருப்பு சட்டையுடன் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சபைக்கு வந்தனர். பெண் எம்.எல்.ஏ.,க்களும் கருப்பு சேலை அணிந்து வந்தனர்.
'யார் அந்த சார்?' என்ற வாசகம் இடம் பெற்ற, 'பேட்ஜ்' அணிந்திருந்தனர். கருப்பு உடையில் வந்த அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எழுப்பிய கேள்வி, நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை.
இந்நிலையில் நேற்று, சட்டசபைக்கு வழக்கம் போல வெள்ளை வேட்டி, சட்டையில் அ.தி.மு.க.,வினர் வந்திருந்தனர்.
இரண்டு நாட்களுக்கு பின் சட்டசபைக்கு வந்த பழனிசாமி, விவாதத்தில் பேசினார்.
கருப்பு உடையில் இருந்தால், அவர்களின் பேச்சு நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படாது என்பதால், அ.தி.மு.க.,வினர் அதை தவிர்த்து விட்டதாக தெரிகிறது.

