ADDED : செப் 09, 2026 04:53 AM

சென்னை: ''த.வெ.க., அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர், 170 மணி நேரம் நடந்துள்ளது,'' என, சபாநாயகர் பிரபாகர் தெரிவித்தார்.
சட்டசபையில் நிறைவு உரையில், சபாநாயகர் பிரபாகர் பேசியதாவது:
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், 28 நாட்கள் சட்டசபை நடந்தது. இதில், 170 மணி நேரம் விவாதம் நடந்துள்ளது. அதன்படி, தினசரி சராசரியாக, 6 மணி, 40 நிமிடம் விவாதம் நடந்தது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில், ஆளும் கட்சியினர், 56 நிமிடங்கள் பேசினர். தி.மு.க.,வினர், 2.36 மணி நேரம் பேசினர். அ.தி.மு.க.,வினர், 1.27 மணி நேரம், இதர கட்சியினர், 2.2 மணி நேரம் பேசினர்.
அதேபோல், பட்ஜெட் உரையில் ஆளும் கட்சியினர், 2.16 மணி நேரமும், தி.மு.க.,வினர் 5.10 மணி நேரமும், அ.தி.மு.க.,வினர் 3 மணி நேரமும், இதர கட்சிகள் 3.49 மணி நேரமும் பேசினர்.
மானிய கோரிக்கை விவாதத்தில் ஆளும் கட்சியினர் 13.28 மணி நேரமும், தி.மு.க.,வினர் 23.35 மணி நேரமும், அ.தி.மு.க.,வினர் 12.58 மணி நேரமும், இதர கட்சியினர், 13.52 மணி நேரமும் பேசினர்.
சபையில் அதிக அளவு வினாக்களுக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விடையளித்துள்ளார். அதேபோல், உறுப்பினர்கள், 678 முறை உரையாற்றினர். அனைத்து உறுப்பினர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கியுள்ளதாக கருதுகிறேன். ஒருமுறை கூட பேசாத உறுப்பினர்களை கண்டறிந்து பேச வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
அதேபோல், சபை நடவடிக்கைகள் முழுமையாக நேரலையில் ஒளிபரப்பானது. தகுதி வாய்ந்த சைகை மொழி பெயர்ப்பாளர்களின் சேவையை பயன்படுத்தி, பேச முடி யாத, செவித்திறன் குறைபாடு உள்ளோரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், அடுத்த கூட்டத்தொடர் முதல், நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
