கட்டுமான திட்டங்கள் பதிவை எளிதாக்க ரியல் எஸ்டேட் சட்டத்தில் திருத்தம் தேவை
கட்டுமான திட்டங்கள் பதிவை எளிதாக்க ரியல் எஸ்டேட் சட்டத்தில் திருத்தம் தேவை
UPDATED : ஜன 06, 2025 05:52 AM
ADDED : ஜன 06, 2025 03:17 AM

சென்னை: கட்டுமான திட்டங்கள் பதிவை எளிதாக்கும் வகையில், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தங்கள் செய்ய, அரசிடம் இந்திய கட்டுமான வல்லுனர் சங்கம் பரிந்துரைகளை வழங்கி உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 5,381 சதுரடி மற்றும் அதற்கு மேலான நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படும் கட்டுமான திட்டங்களை, ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இதில், கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, ரியல் எஸ்டேட் சட்ட நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, இந்திய கட்டுமான வல்லுனர் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு கூறியதாவது:
புதிதாக கட்டுமான திட்ட அனுமதி பெற, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., மற்றும் நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி.,யிடம் விண்ணப்பிக்கிறோம்.
இதற்காக நில உரிமை, பட்டா, பத்திரம், நில வரைபடம், கட்டடத்தின் விபரங்கள், மண் பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.
தற்போது, ஒற்றைச் சாளர முறை உள்ள நிலையில், திட்ட அனுமதிக்காக தாக்கல் செய்யும் ஆவணங்களின் ஒரு பிரதியை, சம்பந்தப்பட்ட துறைகள், ரியல் எஸ்டேட் ஆணையத்திடம் பகிர்வதில்லை.
இதனால், அந்த ஆவணங் களை, கட்டுமான நிறுவனங்கள் மீண்டும் புதிதாக ஆணையத்திடம் அளிக்க வேண்டி உள்ளது.
இப்பிரச்னையால் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க, திட்ட அனுமதி வழங்கும் துறைகள், இதுபோன்ற ஆவணங்களை, ரியல் எஸ்டேட் ஆணையத்திடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
மேலும், வருவாய் துறை ஆவணங்கள் அடிப்படையில், நிலத்தின் குறைந்தபட்ச அளவை அடிப்படையாக வைத்து, ரியல் எஸ்டேட் ஆணையம் பதிவு பணிக்கான ஆய்வை மேற்கொள்கிறது.
இதில், திட்ட அனுமதி, வரைபடம், பத்திரம் அடிப்படையில், நிலத்தின் அளவை எடுத்துக்கொள்ள, சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.
மண் பரிசோதனை போன்ற ஆவணங்களில், அனைத்து பக்கங்களிலும் சான்றிட்டு கையெழுத்திடுவது போன்ற விஷயங்களிலும் பதிவு தாமதமாகிறது.
புதிய கட்டுமான திட்டங்கள் பதிவுக்கான கால வரம்பு குறித்த விஷயங்களை தெளிவுப்படுத்தும் வகையில், ரியல் எஸ்டேட் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் செய்ய வேண்டும்.
இது தொடர்பான பரிந்துரைகளை, தமிழக அரசிடமும், மத்திய அரசிடமும் அளித்து இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.