பிற எழுத்தாளர்களை மதிப்பவரே சிறந்த எழுத்தாளர்: 'அமுதசுரபி' மாத இதழ் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் பேச்சு
பிற எழுத்தாளர்களை மதிப்பவரே சிறந்த எழுத்தாளர்: 'அமுதசுரபி' மாத இதழ் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் பேச்சு
ADDED : ஏப் 28, 2025 04:51 AM

சென்னை: ''பிற எழுத்தாளர்களையும், அவர்களின் எழுத்து ஆற்றலையும் மதிப்பவரே சிறந்த எழுத்தாளர்,'' என, 'அமுதசுரபி' மாத இதழ் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் கூறினார்.
'உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம்' சார்பில், சிறந்த நுால்களுக்கு ஆடிட்டர் என்.ஆர்.கே., விருது மற்றும் பரிசளிப்பு விழா, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள, இந்துஸ்தான் சேம்பர் பில்டிங் அரங்கில் நேற்று நடந்தது.
சங்கத்தின் மக்கள் தொடர்பாளர் மனோன்மணி வரவேற்றார். துணைத்தலைவர் ஆடிட்டர் என்.ஆர்.கே., தலைமை வகித்தார்.
சரோஜா சகாதேவன் எழுதிய, 'கொலுசே... கொலுசே' சிறுகதை தொகுதி நுாலை, திருப்பூர் கிருஷ்ணன் ெவளியிட்டார்.
அதன் முதல் பிரதியை, 'உரத்த சிந்தனை' சங்கப் பொதுச் செயலர் உதயம்ராம் பெற்றுக்கொண்டார்.
சிறுகதைகள் பிரிவில், இந்திரநீலன் சுரேஷ் எழுதிய, 'நிலவும் மலரும்' மற்றும் பாலசாண்டில்யன் எழுதிய, 'பார்த்த ஞாபகம்' நுால்கள் பரிசு பெற்றன. எழுத்தாளர் வேதா கோபாலன் மதிப்புரை வழங்கினார்.
கட்டுரைகள் பிரிவில், ராசி அழகப்பன் எழுதிய, 'தாயின் விரல் நுனி' மற்றும் பவித்ரா நந்தகுமார் எழுதிய, 'சற்றே இளைப்பாறுங்கள்' நுால்கள் பரிசு பெற்றன. அனைத்து இந்திய எழுத்தாளர் சங்கப் பொருளாளர் பிரபாகரன் மதிப்புரை வழங்கினார்.
மதிப்புரை
ஆன்மிக கட்டுரைகள் பிரிவில், பிரபுசங்கர் எழுதிய, 'ராமாயணத்தில் அறியாத பக்கங்கள்' மற்றும் திருவைபாபு எழுதிய, 'கம்பன் கண்ட வள்ளுவம்' நுால்கள் பரிசு பெற்றன. எழுத்தாளர் விசுவநாதன் மதிப்புரை வழங்கினார்.
நாவல்கள் பிரிவில், ராஜலட்சுமி எழுதிய, 'சுடுமண்' மற்றும் லோகநாதன் எழுதிய, 'வகுள தேசம்' நுால்கள் பரிசு பெற்றன. 'கல்கி' வார இதழின் முன்னாள் ஆசிரியர் வி.எஸ்.வி.ரமணன் மதிப்புரை வழங்கினார்.
கவிதைகள் பிரிவில், பாஸ்கர் எழுதிய, 'விழியின் ஓசை' மற்றும் பொதிகை செல்வராசன் எழுதிய, 'பூங்காற்றே எனைத் தீண்டு; தீந்தமிழ் கேட்கட்டும்' நுால்கள் பரிசு பெற்றன. 'கவிதை உறவு' மாத இதழ் ஆசிரியர் ராதாகிருஷ்ணன் மதிப்புரை வழங்கினார்.
சிறுவர் இலக்கியம் பிரிவில், உமையவன் எழுதிய, 'மாயம் செய்த விதைக்குருவி' மற்றும் சாதனாஸ்ரீ கவுதம் எழுதிய, 'மேரி மார்செலாவும், கடல்களின் அல்லி மலரும்' நுால்கள் பரிசு பெற்றன. 'சிறுவர் வானம்' காலாண்டிதழ் ஆசிரியர் சூடாமணி சடகோபன் மதிப்புரை வழங்கினார்.
எழுத்தாளர்களுக்கு பரிசு கள் வழங்கி, திருப்பூர் கிருஷ்ணன் பேசியதாவது:
தற்போது, தமிழ் எழுத்தாளர்கள் குறித்த சமூகத்தின் பார்வை மாறியுள்ளது. எழுத்தாளர்களுக்கு தலைக்கனம் வந்து விடக்கூடாது. அப்படி வந்து விட்டால், அது அவர்களை தாழ்த்தி விடும்.
வாழ்த்துக்கள்
எழுத்தாளர்களுக்கு பண்பு இருக்க வேண்டும். வாசகர்கள் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். பிற எழுத்தாளர்களையும், அவர்களின் எழுத்து ஆற்றலையும் மதிப்பவரே சிறந்த எழுத்தாளர்.
முன்னர், அப்படிப்பட்ட எழுத்தாளர்கள் இருந்தனர். நல்ல படைப்புகளை, சிறந்த எழுத்துக்களை அடையாளம் கண்டு, தொடர்ந்து அவர்களை சிறப்பித்து வரும் பணியை, 'உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம்' செய்கிறது.
எழுத்து எனும் வரப்பிரசாதத்தை அடைந்திருக்கும், அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
சங்கத் தலைவர் பத்மினி பட்டாபிராமன் நன்றி கூறினார்.