முதல்வருக்குத்தான் டப்பிங் தேவை பா.ஜ.,வுக்கு இல்லை: அண்ணாமலை
முதல்வருக்குத்தான் டப்பிங் தேவை பா.ஜ.,வுக்கு இல்லை: அண்ணாமலை
ADDED : பிப் 16, 2025 07:26 AM
கோவை : ''முதல்வருக்கு டப்பிங் செய்ய அ.தி.மு.க.,வில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் தேவைப்படுகின்றனர்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் அவர் அளித்த பேட்டி:
அமெரிக்காவில் 29 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். 7.50 லட்சம் இந்தியர்கள் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருப்பதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.
டிரம்ப் தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவரை வெளியேற்றி வருகிறார்.
ஜன., 19ம் தேதிக்கு முன், அமெரிக்காவுக்குள் முறையான ஆவணங்கள் இன்றி, மெக்சிகோ எல்லை வழியாகக் குடியேற முயன்று, பிடிபட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்; இந்தியாவுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.
'டாங்கி ரூட்' எனப்படும், சட்டவிரோத குடியேற்ற நெட்வொர்க்கை உடைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கும்; இந்தியாவுக்கு திரும்பியவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் வழங்கப்படும் என, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்துக்கு அதிக நிதி
பட்ஜெட்டில் தமிழகத்துக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை என, முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார்.
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும், மத்திய அரசின் திட்டங்கள். முதியோர் உதவித் தொகை, ஏழைகளுக்கு வீடு, கிசான் சம்மன் நிதி, முத்ரா திட்டம் என பல்வேறு திட்டங்களில், கோடிக்கணக்கான பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர்.
மோடி அரசு பொறுப்பேற்றபின், நிதிப்பகிர்வு அடிப்படையில் தமிழகத்துக்கு 3.5 மடங்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது. ரூ.46,000 கோடி மதிப்பில், தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் நடந்து வருகின்றன.
ரயில்வே, விமான நிலையம், துறைமுகம் என நிறைய பணிகள் நடக்கின்றன. தமிழகத்துக்கு ரூ.1.60 லட்சம் கோடி நிதி கொடுக்கப்பட்டுள்ளது.
முதல்வருக்கு டப்பிங் தேவை
அ.தி.மு.க.,வின் பழனிசாமி, பா.ஜ.,வின் டப்பிங் குரல் என முதல்வர் கூறியிருக்கிறார். முதல்வருக்குத்தான் டப்பிங் தேவைப்படுகிறது.
அவருடைய குரலாக, அறிவாலயத்தில் இருந்து, 'அடித்து விடுவேன், மிதித்து விடுவேன்' என பலர் பேசுகிறார்கள். பா.ஜ.,வுக்கு டப்பிங் யாரும் தேவையில்லை.
உதயநிதிக்கு டப்பிங் செய்ய, நடிகர் சந்தானம் தேவைப்படுகிறார். முதல்வருக்கு டப்பிங் செய்ய அ.தி.மு.க.,வில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் தேவைப்படுகின்றனர்.லோக்சபாவில் தி.மு.க., 7 சதவீத வாக்குகள் குறைவாக வாங்கியுள்ளது. 2026ல் 20 சதவீத ஓட்டு குறைந்து விடும்.
ஹிந்து சமய அறநிலையத்துறை, சி.ஏ.ஜி., அறிக்கைக்கு ஆவணங்களை சமர்ப்பிப்பதில்லை. அவ்வளவு ஊழல் அங்கு நடக்கிறது. இவ்வாறு, அண்ணாமலை கூறினார்.

